Friday, 7 April 2017

சிரியாமீதான அமெரிக்காவின் தாக்குதல் கூறும் செய்திகள்


பிந்திக் கிடைத்த செய்திகளின்படி அமெரிக்காவின் தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் பாராளமன்றத்தின் அனுமதி பெறாமல் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெறாமல் இறைமையுள்ள ஒரு நாடான சிரியாவின் மீது அமெரிக்கா மத்திய தரைக் கடலில் நிலை கொண்டுள்ள USS Ross, USS Porter ஆகிய வாழிகாட்டல் ஏவுகணை தாங்கிக் கப்பல்களில் இருந்து 59 tomahawk ஏவுகணைகளை வீசியுள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொடுத்த காரணம் சிரிய மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுதை தடுப்பது அல்ல. தடை செய்யப்பட்ட வேதியல் படைக்கலன்களின் பரவலாக்கம் அமெரிக்கப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றே அவர் கூறினார்.

இலக்குகள்
சிரியாவின் ஹொம்ஸ் மாகாணத்தில் உள்ள அல் ஷயரட் விமானத்தளத்தின் மீதே அமெரிக்காவின் ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 6 பேர் கொல்லப்பட்டத்தாக சிரியா அறிவித்துள்ளது.சிரியப் போர்விமானங்கள், அவற்றின் பாதுகாப்பான நிறுத்தும் இடங்கள், கதுவிகள் (radar equipment), படைக்கல சேமிப்பங்கள், விமான எரிபொருள் சேமிப்பு நிலையங்கள், வான் பாதுகாப்பு முறைமைகள் ஆகியவற்றை இலக்கு வைத்தே ஏவுகணைகள் வீசப்பட்டன.

இழப்புத் தொடர்பான முரண்பட்ட அறிக்கைகள்
இரசியாவின் அறிக்கையின் படி ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்ட இழப்பு: "extremely low". பழுது பார்க்க நிறுத்தப்பட்டிருந்த ஆறு விமானங்கள் சேதமடைந்தன என்கின்றது இரசியா. 
சிரியாவின் அறிக்கையின் படி: "big material losses". தாக்குதல் நடத்துவது பற்றி இரசியாவிற்கு அமெரிக்கா கொடுத்த தகவல் சிரியாவிற்கு பரிமாறப்பட்டது. அதனால் அங்கிருந்து பல விமானங்கள் தப்பிச் சென்று விட்டன. பழுதடைந்த விமானங்கள்  மட்டுமே அழிக்கப்பட்டன. சிரிய வான் படைக்கு சிறிய அளவிலான ஆளணி இழப்பு ஏற்பட்டதற்கும் இதுவே காரணமாகும்.   தாக்குதலுக்கு உள்ளான அல் ஷயரத் விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளில் ஒன்று மட்டுமே பயன்படுத்தப்பட முடியாதவகையில் சேதமடைந்துள்ளது. 

இரசிய நகர்வுகள்
இரசியா தனது கடற்படைக் கப்பல்களை சிரியாவை நோக்கி நகர்த்தியுள்ளது. இரசியாவின் frigate வகையைச் சார்ந்த The Admiral Grigorevich என்னும் வழிகாட்டி ஏவுகணை தாங்கிக் கப்பல் (a cruise missile-carrying) என்னும் கப்பலே சிரியாவின் டார்ட்டஸ் துறைமுகம் சென்றுள்ளது. மேலும் தாக்குதல்கள் நடக்காமல் இருக்க ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் சிரியாவில் நிறுத்தப்படும் எனச் சொல்லியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இரசியப் பிரதிநிதி சிரியாவில் அமெரிக்கா செய்த தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு ஊக்கமளிக்கின்றது எனவும் தாக்குதல் நடந்தவுடன் ஐ எஸ் அமைப்பினர் சிரிய அரச படைகள் மீது தாக்குதல் நடத்தினர் எனவும் குற்றம் சாட்டினார். ஈராக்கிலும் லிபியாவிலும் நீங்கள் அரச படைகளை அழித்ததால் அங்கு பயங்கரவாதிகள் பெருகி உள்ளது போல் சிரியாவிலும் நடக்க வேண்டுமா என அவர் மேற்கு நாடுகளைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார். ஐக்கிய நாடுகள் சபையில் சிரியாவில் நடந்த வேதியியல் குண்டு வெடிப்புப் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போது அமெரிக்கா ஒரு தலைப்பட்சமாக ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதையும் இரசியப் பிரதிநிதி கடுமையாகச் சாடினார்.

முரண் பட்ட தீர்மானங்கள்
சிரியாவில் வேதியியல் குண்டுகள் பாவித்தமை தொடர்பாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகியவை இணைந்து கொண்டுவந்த தீர்மானத்தை இரசியா ஏற்க மறுத்தது. இரசியா தான் ஒரு தீர்மானத்தை முன்வைத்தது. அதில் சிரியாவில் விசாரணைக்குச் செல்லவிருக்கும் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம் போதாது என அமெரிகா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் குற்றம் சாட்

Tomahawk ஏவுகணைகள்
 Tomahawk ஏவுகணைகள் தரையில் இருந்தும், விமானங்களில் இருந்தும், கப்பல்களில் இருந்தும் நீர்மூழ்கிகளில் இருந்தும் வீசக் கூடிய தொலைதூர ஏவுகணைகளாகும். இவை உறுதியாகப் பாதுகாக்கப்பட்ட தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்க உருவாக்கப்பட்டவை. இவை ஒலியிலும் குறைந்த வேகத்தில் பாய்பவை என்றாலும் எந்தக் கால நிலையிலும் துல்லியமாக இலக்கைத் தாக்கக் கூடியவை. அமெரிக்க ஏவுகணைகளின் துல்லியத் தாக்குதலை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

கணக்கற்றோர் கொல்லப்பட்டனர்.
பராக் ஒபாமா சிரியா வேதியியல் படைகலன்களைப் பாவித்தால் அது செங்க்கோட்டைத் தாண்டியது போல என பல முடை மிரட்டி இருந்தார். ஆனால் அவரால் செய்ய முடியாமல் போனதை டிரம்ப் செய்து முடித்துள்ளார். சிரியாவில் போர் தொடங்கியதில் இருந்து எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதை அடிக்கடி கூறி வந்த மேற்குலக ஊடங்கங்கள் தற்போது அதைப்பற்றிப் பேசுவதில்லை. 2016-ம் ஆண்டு நடுப்பகுதியில் ஐந்து முதல் ஆறு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் பல இலட்சக் கணக்கானோர்ர் இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் தகவல்கள் வந்தன. சிரியப் பிரச்சனை பெருமளவில் தஞ்சக் கோரிக்கையானவர்களை உருவாக்கி பல நாடுகளில் அது குடிவரவுக்கு எதிரான கொள்கைகளாக உருவெடுத்தது. அதனால் கொல்லப்பட்டவர்களின் தொகையை வெளிவிடுவது நிறுத்தப்பட்டது.  அந்தக் கொலைகளை நிறுத்தாதவர்கள் இப்போது சரின் குண்டுப் பரவலாக்கத்தை நிறுத்த வேண்டும் எனத் துடிக்கின்றார்கள்.

சட்டபூர்வமானதா?
தனது நடவடிக்கைகான சட்ட பூர்வ அங்கீகாரம் பெறுவதற்கே டிரம்ப் வேதியியல் குண்டுகளின் பரவலாக்கம் அமெரிக்கப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றார். அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் எனக் கருதுமிடத்து அமெரிக்க அதிபர் ஒரு படை நடவடிக்கைக்கு உத்தரவிடலாம். போர் பிரகடனம் செய்யப்படாத ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது உலக நியமங்களுக்கு விரோதமானது. அதனால் இரசியா அமெரிக்காவின் தாக்குதலைச் சட்ட விரோதமானது என்கின்றது.

சிரியாவின் அறிக்கை
சிரியாவின் அறிக்கை அமெரிக்காவை கடுமையாகச் சாடவில்லை. அமெரிக்க ஏவுகணைத் தாக்க்குதல் கவனமில்லாதது, குறும்பார்வையுடையது, பொறுப்பற்றது என்று மட்டும் சிரியா சொல்லியிருக்கின்றது.சிரியத் தொலைக்காட்சி ஆக்கிரமிக்கும் செயல் எனவும் பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு குந்தகம் விளைவிக்கின்றது என்றும் சொல்லியிருந்தது. ஆனால் இரசியாவின் அறிக்கை கண்டனம் தெரிவித்திருந்தது. அமெரிக்காவுடன் சிரிய வான் வெளியில் அமெரிக்க விமானங்களுக்கும் இரசிய விமானங்களுக்கும் இடையில் தவறுதலான மோதல்களைத் தவிர்ப்பதற்கு இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருந்தன. அந்த உடன்பாட்டில் இருந்து இரசியா விலகுவதாக அறிவித்துள்ளது.

தவறு விட்ட இரசியா
 சிரியாவில் சரின் குண்டுகள் வெடித்ததால் அப்பாவிப் பொதுமக்கள் 80 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். அந்த சரின் குண்டுகள் சிரியப் போராளிக்கள் வசமிருந்தவை என்றும்  அவை தவறுதலாக வெடித்தவை என்றும் இரசியா தெரிவித்திருந்தது. 2013-ம் ஆண்டு சிரிய அரச படைகள் வீசிய சரின் குண்டுகளால் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா சிரியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இரசிய அதிபர் புட்டீன் தடுத்திருந்தார். சிரியாவில் உள்ள தடைசெய்யப்பட்ட வேதியியல் குண்டுகளைத் தான் அகற்றுவதாக உறுதியளித்திருந்தார். சிரியாவில் எந்த ஒரு தரப்பினர் கைகளிலும் தடை செய்யப்பட்ட வேதியியல் குண்டுகள் இல்லாமல் செய்ய இரசியா தவறிவிட்டது.

2013-ம் ஆண்டு இரசியப் படைகள் சிரியாவில் நிலை கொண்டிருக்கவில்லை. தற்போது லதக்கியாவில் சிரிய விமானப் படைத்தளமும் டார்ட்டஸில் கடற் படைத்தளமும் இரசியா வைத்திருக்கின்றது. ஒரு வல்லரசின் படைகள் நிலை கொண்டுள்ள ஒரு நாட்டில் இன்னொரு வல்லரசு குண்டு வீசுவது ஒரு பிரச்சனைக்கு உரிய நடவட்டிக்கையே. அமெரிக்கப் பாதுகாப்புத் துறைப் பேச்சாளர் இரசியாவிற்கு அறிவித்த பின்னரே தாக்குதல் செய்யப்பட்டன என்றார். இரசியர்கள் எவரும் கொல்லப்படாமல் இருப்பதற்கான எல்லாஅ முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இரசிய அதிபர் புட்டீனின் பேச்சாளர் அமெரிக்கா மேற் கொண்ட ஏவுகணைத் தாக்குத்தல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பெரிதும் பாதிக்கும் என்றார்.

சிரியா மீதான தாக்குதல் சொல்லும் சேதிகள்
 • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிரியா, யேமன், ஈராக் போன்ற நாடுகளில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க தனது படைத் தளபதிகளுக்கு உத்தரவும் அதிகாரமும் வழங்கியுள்ளார் என்ற செய்தி உறுதிப்படுதப்பட்டுள்ளது. இது ஈரானுக்கும் ஒரு மறைமுக எச்சரிக்கையை விடுக்கின்றது. 
 • சிரிய அதிபர் அசாத்தை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கம் தற்போது அமெரிக்காவிற்கு இல்லை. அதனால் தொடர்ச்சியான தாக்குதல் நடக்காது. 
 • டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இரசிய உளவுத்துறை உதவி செய்தது. அவர் இரசியாவிற்கு சாதகமாக நடப்பார் என அவரது எதிரிகள் சொல்வதற்கு ஒரு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏவுகணைத் தாக்குதலை அடுத்து இரசியா அவசரமாகக் கூட்டிய ஐநா பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் கடுமையான வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். 
 • கிறிமியா இணைப்பும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பதவியில் இருந்து விலக்கப்படுவதை  தடுத்ததும் இரசிய அதிபர் புட்டீன் உலக அரங்கில் செய்த இரு பெரும் அதிரடி நடவடிக்கைகள். அவை அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கு சவால் விடுவதாக அமைந்தன.
 • பனிப்போரில் சோவியத் ஒன்றியம் தோல்வியடைந்த பின்னர் உலகில் ஒரு துருவ ஆதிக்க நிலை உருவாகியுள்ளது என மேற்கு நாடுகள் நினைத்திருக்கையில் இரசியாவும் சீனாவும் அதற்கு அண்மைக்காலங்களாக பெரும் சவால்களை விடக்கூடிய வகையில் தமது படைவலுவை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நிலைமை இன்னும் அமெரிக்காவிற்குப் பாதகமாக உருவாகவில்லை என உணர்த்துகின்றது.
 • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கைகள் எதிர்வு கூறமுடியாதவையும் மரபு வழியானவையும் அல்ல என்பதை அவர் மீண்டும் ஒரு தடவை உலகிற்கு உணர்த்தியுள்ளார்.
 • இதே மாதிரியான நடவடிக்கையை வட கொரியாவிலும் எடுக்கத் தயங்க மாட்டேன் என்பதியும் அமெரிக்க அதிபரின் நடவடிக்கை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றது.
 • மேற்காசியா மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் உள்ள அமெரிக்க சார்பு ஆட்சியாளர்கள் அமெரிக்கா தமது பிராந்தியதில் எந்த அளவிற்கு அக்கறையும் ஆதிக்கமும் செலுத்தப் போகின்றது என்பதையிட்டு கரிசனை கொண்டுள்ள வேளையில் அவர்களுக்கு ஓர் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
 • அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் ஒரு சீரற்ற நிலையில் உள்ளது அதனால் காத்திரமான நடவடிக்கைகள் எதையும் செய்ய முடியாது எனக்கூறும் பல விமர்சகர்களுக்கு ஒரு பதில் கூறப்பட்டுள்ளது.
 • அமெரிக்காவில் எப்போதும் இல்லாத அளவு ஒரு புதிய அதிபருக்கான மக்கள் ஆதரவு மிகக் குறைந்த அளவில் உள்ளது. அதை மாற்றி டிரம்ப் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்ச்சி இதுவாக இருக்கலாம்.

Wednesday, 29 March 2017

தேசியவாதங்களும் தொழில்நுட்பமும் பொருளாதார வளர்ச்சியும்

முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகள் பிழைத்துப் போகின்ற வேளைகளில் அந்தக் கொள்கைகளில் மாற்றம் செய்யப்படாமல் இருப்பதற்காக நடக்கின்ற பிழைகளுக்கு வேறு காரணங்களை காட்டி வெற்றி பெறுவது முதலாளித்துவவாதிகள் தொடர்ந்து செய்யும் செயல். இனவாதம், மத மோதல் போன்றவை அவர்கள் விரும்புக் கருவிகள். 2007-ம் ஆண்டின் பின்னர் உருவான பொருளாதார வீழ்ச்சிக்கு குடிவரவையும் வளர்முகநாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதியும் காரணம் என தொடர்ந்து முன் வைக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றது. சீனா தனது நாணயத்தின் பெறுமதியை வேண்டுமென்றே தாழ் நிலையில் வைத்திருக்கின்றது என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. அமெரிக்க அரசின் மொத்த கடன் தொகையான 20ரில்லியன் டொலர்களில் சினாவின் பங்கு 1.157ரில்லியனும், ஜப்பானின் பங்கு 1.136 ரில்லியனுமாகும். 

பணவீக்கம் அதிகரிக்காமையும்(Deflation) மீள்வீக்கமும் (Reflation)
கடந்த சில ஆண்டுகளாக பணவீக்கம் அதிகரிக்காமை (Deflation) பொருளாதாரப் பிரச்சனையாக இருந்தது. இப்போது கட்டுப்படுத்தப்பட்ட விலைவாசி அதிகரிப்பு பல நாடுகளில் செய்யப்படுகின்றது. இது மீள்வீக்கம் (Reflation) என அழைக்கப்படுகின்றது. 2007-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடி ஓரளவுக்கு தீர்க்கப்பட்டு இப்போது உலகப் பொருளாதாரம் வளரும் அறிகுறிகள் தென்படுகின்ற வேளையில் பலவிதமான தேசிய வாதங்கள் எழுந்துள்ளன. வெள்ளைத் தேசியவாதமும் பொருளாதாரத் தேசியவாதமும் உலக அமைதிக்கும் செழிப்பிற்கும் பாதகமான நிலையை எடுத்துள்ளன. 

பரப்பியவாதிகள் (Populists)
பரப்பியவாதிகள் என்போர் மக்களிடையே எது பிரபலமாக இருக்கின்றதோ அதை தமது கொள்கைகளாக வகுத்துக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகளாகும். மக்களிடையே குடிவரவுக்கு எதிரான கருத்து அதிகரிக்கும் போது அவர்கள் குடிவரவுக்கு எதிரான கொள்கைகளைத் தமதாக்கிக் கொள்வர். ஒரு நல்ல ஆட்சியாளர் எடுத்த சிறந்த தொடர் நடவடிக்கைகள் மக்களுக்கு பல  குறுகிய காலத்தில் சுமைகளைக் கொடுத்தாலும் அவை நீண்டகாலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைகளைக் கொண்டுவரும். குறுங்காலத்தில் மக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கையில் பரப்பியவாதிகள் தங்கள் கொள்கைகளை மக்களின் குறுங்கால நோக்கங்களுக்கு ஏற்ப வகுத்துக் கொள்வர். அதை வைத்து ஆட்சியையும் பிடித்துக் கொளவர். நல்ல ஆட்சியாளர் எடுத்த நடவடிக்கையின் பயன் தரும் போது பரப்பியவாதிகள் ஆட்சியில் இருப்பர். யாரோ போட்ட விதையின் அறுவடைகளைத் தாம் செய்து கொள்வர். 

குடிவரவு எதிர்ப்பு
பரப்பியவாதம், பொருளாதாரத் தேசியவாதம், வெள்ளைத் தேசியவாதம் ஆகியவற்றைக் கொள்கையாகக் கொண்டவர்களின் பரப்புரைகள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டுமா என்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் வெளியேறவேண்டும் என்பதற்கு அதிகப்படியானோர் வாக்களித்தனர். இதே போலத்தான் 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவும் அமைந்தது. இது ஒரு தொடர் சரிவாக வட அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் பரவுமா எனப் பலரும் அஞ்சிக் கொண்டிருக்கையில் நெதர்லாந்தில் தேசியவாதிகள் தேர்தல் தோல்வியைச் சந்தித்தனர். ஆனால் மதவாதம் இஸ்லாமிய எதிர்ப்புவாதம் ஆகியவற்றைக் கொண்ட வலதுசாரியினர் இந்தியாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட அதாவது பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையிலும் பார்க்க அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் பெரு வெற்றியீட்டியுள்ளனர். அடுத்தாக பிரான்சில் 2017 ஏப்ரல் 23-ம் திகதி நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. அடிக்கடி சடுதியான அரசியல் மாற்றங்களைக் கொண்டுவரும் பிரான்ஸில் நீண்ட காலமாகப் பெரும் அரசியல் மாற்றங்கள் நடக்கவில்லை. குடிவரவுக்கு எதிரான கொள்கைகான ஆதரவு பிரான்சில் அதிகரித்து வருகின்றது

வர்த்தகப்பாதுகாப்புக் கொள்கை(trade protectionism)
1988-ம் ஆண்டில் இருந்து சீனா செய்து வரும் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் 2011-ம் ஆண்டு அது உலக வர்த்தக அமைப்பில் இணைந்து கொண்டதும் அதன் ஏற்றுமதியைப் பெருமளவில் அதிகரிக்கச் செய்தன. சீனா உலகின் தொழிற்ச்சாலையானது. அதனால் பல வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பல வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போயின. வர்த்தகப்பாதுகாப்புக் கொள்கை(trade protectionism), குடிவரவு எதிர்ப்பு, உள்நாட்டு முதலாளிகளுக்கு அழுத்தம் கொடுத்தல், பயமுறுத்தல் கலந்த ஒருபக்கச்சார்பு (belligerent unilateralism) ஆகியவையின் கலவையே தற்போதைய அமெரிக்க ஆட்சியாளர்களின் கொள்கை. தன்னுடய பதவியேற்பு உரையில் வர்த்தகப்பாதுகாப்புக் கொளை செழிப்பையும் வலிமையையும் தரும் என்றார் டொனால்ட் டிரம்ப். முதலாம் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடையில் உருவான பொருளாதார மந்தத்தின் போது தீவிரமான பொருளாதாரத் தேசியவாதம் பல நாடுகள் இறக்குமதிக்கு எதிரான வரிவிதிப்புக்களையும் தடைகளையும் செய்தன. அப்போதைய உலகப் பொருளாதாரக் கட்டமைப்புப் போல் 2007-ம் ஆண்டு இருக்கவில்லை. உலகமயமாதல் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அநேகமாக எல்லா நாடுகளையும் பொருளாதார ரீதியில் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்தியது. ஒரு நாட்டில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு பல நாடுகளை பாதிக்கக் கூடிய சிக்கலான நிலைமை இப்போது நிலவுகின்றது.

எரிபொருள் அரசியல்
அமெரிக்க அதிபர் டிரம்பின் அமைச்சரவை பற்றிப் பல குற்றச் சாட்டுகள் வந்த போதிலும் அவரது வெளியுறவுத் துறைச் செயலர் ரெக்ஸ் ரில்லர்சனும் எரிபொருள் வளத்துறை அமைச்சர் ரிக் பெரியும் உலக எரிபொருள் உற்பத்தி பாவனை விநியோகம் ஆகியவற்றில் நிபுணர்கள். அமெரிக்கா உலகின் முதலாவது எரிபொருள் உற்பத்தி நாடாக உருவெடுத்த வேளையில் அவர்கள் தங்களது பதவியை ஏற்றுள்ளார்கள். அமெரிக்கா தனது வெளியுறவுத் துறையில் எரிபொருளை ஒரு கருவியாகப் தனக்கு ஏற்ப பாவிக்கக் கூடிய நிலைய அடைந்துள்ளது. 2011-ம் ஆண்டு அமெரிக்கா உலகிலேயே அதிக அளவு எரிவாய் உற்பத்தி செய்யும் நாடாக உருவெடுத்து இரசியாவை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது. 2014-ம் ஆண்டு அது அதிக அளவு மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும் உருவெடுத்தது. ஒபெக் நாடுகள் கூட்டமைப்பு தமது உற்பத்தியை கட்டுப்படுத்தி எரிபொருள் விலையை அதிகரிக்கச் செய்ய முயன்ற போது அமெரிக்கா தனது எரிபொருள் உற்பத்தியை அதிகரித்து எரிபொருள் விலையை வீழ்ச்சியடையச் செய்கின்றது. 2017-ம் ஆண்டில் மசகு எண்ணெயின் விலை ஐம்பது டொலருக்கு மேல் அதிகரிக்க அமெரிக்கா அனுமதிக்காது போல் தெரிகின்றது. இது எரிபொருள் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கும் இரசியாவின் பொருளாதாரம் தலையெடுக்காமல் செய்யும் உத்தியாகும். எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்திருப்பது பல வளர்முக நாடுகளுக்கு அதிலும் முக்கியமாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பெரும் வாய்ப்பாகும். ஆனால் எரிபொருள் உற்பத்தி நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதால் அந்த நாடுகள் உலகின் பல் வேறு நாடுகளில் இருந்து செய்யும் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேற்காசிசாவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள எரிபொருள் உற்பத்தி நாடுகளுக்கு பல வளர்முக நாடுகளில் இருந்து சென்று வேலைசெய்வோர் மூலமாகக் கிடைக்கும் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவின் எரிபொருள் கொள்கை பல்வேறுவிதமான தாக்கங்களை உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்துகின்றது. 

முப்பரிமாண அச்சும் செயற்கை விவேகமும்
2007-ம் ஆண்டுக்கு முன்னர் உருவான தொழில்நுட்ப வளர்ச்சி அதிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி 2008-ம் ஆண்டு உருவான் பொருளாதார நெருக்கடிக்கு ஏதுவாக அமைந்தது. தற்போது முப்பரிமாண அச்சுக்கலையும் செயற்கை விவேகமும் (artificial intelligence) உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கின்றன. முப்பரிமாண அச்சு பல தொழிலாழர்கள் செய்யும் வேலைய மிகக் குறுகிய காலத்தில் மிகக்குறைந்த செலவுடன் செய்யக் கூடியது. செயற்கை விவேகம் பல தொழில்நெறிஞர்களின் வேலைகளைச் செய்யக் கூடியதாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றது. பல கணக்கியல் மற்றும் சட்டத்துறையைச் சார்ந்த பெரு நிறுவனங்கள் செயற்கை விவேக ஆராய்ச்சிக்கு அதிக நிதி செலவிடுகின்றன. இதனால் பல சட்டம் மற்றும் கணக்கியல் படித்தவர்களின் வேலைகளை கணினிகள் மூலம் செய்யக் கூடியவகையில் செயற்கை விவேகத் தொழில்நுட்பம் வேகமாக வளர்கின்றது. முப்பரிமான அச்சுக்கலையாலும் செயற்கை விவேகத்தாலும் மேற்கு நாடுகளில் வெளிநாட்டவர்கள் தேவையில்லை என்ற நிலை உருவாக இருப்பதால் தேசியவாதிகள் குடிவரவுக்கு எதிரான கொள்கைய தீவிரப்படுத்தி வருகின்றார்கள். தற்போது 700மில்லியன் மக்களைக் கொண்ட ஐரோப்பா 2050-ம் ஆண்டு 557முதல் 653 மில்லியன் மக்களையும் கொண்டதாகவிருக்கின்றது என ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது. அந்த ஊழியர் இடைவெளியை அவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு நிரப்பவிருக்கின்றார்கள். 

ஜப்பானின் பிரச்சனைக்குத் தீர்வு
உலக மக்கள் தொகை 1950இல் இருந்து 2000 வரை மூன்று பில்லியன்களில் இருந்து ஆறு பில்லியன்களாக அதிகரித்தது. ஆனால் 2000-ம் ஆண்டில் இருந்ததில் இருந்து 2050-ம் ஆண்டு ஐம்பது விழுக்காடு அதிகரிப்பை மட்டும் காணும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஜப்பானில் முதியோர் தொகை அதிகரித்தும் இளையோர் தொகை குறைந்து கொண்டும் செல்வதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க ஜப்பான் வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு ஆட்களைத் தேட வேண்டி வருமென இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பல பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். ஜப்பானியத் தேசியவாதிகள் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள். அதன் விளைவாக ஜப்பானில் செயற்கை விவேகத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டியிருந்தது. Fukoku Mutual Life Insurance என்ற ஜப்பானிய நிறுவனம் செயற்கை விவேகத்தில் 200மில்லியன் யென் முதலீடு செய்ததன் விளைவாக உற்பத்தித் திறன் அதிகரித்ததால் முதலாம் ஆண்டில் மட்டும் 140மில்லியன்கள் சேமிக்கக் கூடியதாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இயந்திர மனிதர்கள் எனப்படும் ரொபோக்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை வளர்ச்சி நிலையில் வைத்துள்ள ஜப்பானுக்கு செயற்கை விவேகத் தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் நன்மையைக் கொடுக்கின்றது. 

இந்தியாவும் சீனாவும்
இந்தியாவும் சீனாவும் அதிக மக்கள் தொகையைக் கொண்ட் வளர்முக நாடுகள். குறைந்த ஊதியத்தில் தொழில்செய்யக் கூடிய பலதரப்பட்ட ஊழியர்களையும் கொண்ட நாடுகள். இரண்டும் வேகமாக வளரும் பொருளாதாரங்கள். இர்ண்டு நாடுகளிலும் உறுதியான தலைமை உருவெடுத்துள்ளது. இரண்டு நாடுகளினதும் புள்ளி விபரங்கள் நம்பத்தகுந்தவை அல்ல. உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக அவை திரித்து வெளிவிடப்படுகின்றன. இரண்டு நாடுகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. சீனாவின் அதிகரிக்கும் முதியோர் தொகை பெரும் பிரச்சனையாகிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் நீர்த்தட்டுப்பாடு மோசமாகிக் கொண்டிருக்கின்றது. அது தேசிய ஒருமைப்பட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது. உலகமயமாதல் இருநாடுகளிலும் பல கோடி மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்து நீக்கியுள்ளது. இரு நாடுகளும் தான் எதிர்கால உலகப் பெரு வல்லரசுகளாக இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவெடுக்கும் என எதிர்வு கூறப்பட்டது. ஆனால் மேற்கு நாடுகளில் பெருகும் தேசியவாதம், முப்பரிமாண அச்சுக்கலை, செயற்கை விவேகம் ஆகியவை இரு நாடுகளையும் கடுமையாகப் பாதிக்கவிருக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி இவை உலகப் பெரு வல்லரசுகளாகுமா என்பதை ஐயத்திற்கு இடமாக்கியுள்ளது.  வேலை செய்யக் கூடிய மக்கள் தொகையைக் குறைவாகக் கொண்டுள்ள ஜப்பான் முப்பரிமாண அச்சுக்கலை, செயற்கை விவேகம் ஆகியவற்றில் அதிக முதலீடு செய்துள்ளது. ஜப்பானின் மிற்சுபிசி நிறுவனம் 2030-ம் ஆண்டு செயற்கை விவேகத்தால் 7.4 மில்லியன் வேலைகள் பறிபோகவிருக்கின்றது என்றும் ஐந்து மில்லியன் வேலைகள் மட்டும் உருவாக்கப்படவிருக்கின்றது என்றும் எதிர்வு கூறியுள்ளது.


மேற்கு நாடுகள் எனச் சொல்லப்படும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் தேசியவாதத்தையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் இணைத்து ஆசிய நாடுகள் பொருளாதாரத்தில் மேம்படாமல் தடுக்க முயல்கின்றன. அவை அதிகம் குறிவைப்பது சீனாவையும் இந்தியாவையுமே

Thursday, 23 March 2017

இலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது

இலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாதிகள் தாக்குதல் செய்த போது அந்த நாடுகளின் உளவுத் துறைகள் மீது பிரித்தானிய ஊடகங்கள் குற்றம் சுமத்தின.  அதே போல் இலண்டன் தாக்குதலுக்கும் பிரித்தானிய உளவுத் துறை மீது குற்றம் சாட்ட முடியுமா? உலகிலேயே திறமையாகவும் பயங்கரமாகவும் செயற்படும் 17 உளவு அமைப்புக்களைக் கொண்ட அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு இருபது தாக்குதல்கள் நடந்தன. அண்மைக்காலங்களாக நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் Low-Tech ஆக இருக்கின்றன. எந்தவித தொழில்நுட்பமும் இன்றி நடக்கும் தாக்குதல்களாக இருக்கின்றன.

இலண்டன் தாக்குதல் பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸ் விமான நிலையத் தாக்குதல் நடந்து ஓராண்டுப் நிறைவின் போது நடந்துள்ளது. இலண்டன் தாக்குதலுக்கு மறுநாள் பெல்ஜிய நகரான Antwerpஇல் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவகையில் சிவப்பு விளக்கில் நிற்காமற் சென்ற வண்டி ஒன்றை காவற்துறையினர் துரத்தி இடை மறித்த போது அதில் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதை ஓட்டிச் சென்ற வட ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிமனித (Lone-wolf)தாக்குதல்.

வேறு யாருடனும் தொடர்பு இல்லாமலும் யாருடைய உதவி இல்லாமலும் இலண்டன் தக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பல நாடுகளில் அண்மைக்காலங்களில் இப்படிப் பட்ட தாக்குதல்கள் நடந்தன. எல்லா தொடர்பாடல்களும் உளவுத் துறையினரால் ஒட்டுக் கேட்கப்படுவதால். பலர் இணைந்து தாக்குதல் செய்வது குறைக்கப்பட்டுள்ளது. தனிமனித (Lone-wolf)தாக்குதலிற்கான வரைவிலக்கணம்:

 1. தனிப்பட்ட ஓரிருவர் நடத்தும் தாக்குதல்
 2. கட்டளைப்படி நடக்காத தாக்குதல்
 3. அரசியல் நோக்கத்திற்காக நடக்கும் தாக்குதல்
 4. எந்த ஓர் அமைப்புடனும் தொடர்பில்லாதவர்களின் தாக்குதல்
இந்த தனிமனிதத் தாக்குதலையிட்டு மேற்குலக நாடுகளில் அதிக கரிசனை கொள்ளப்படுகின்றது. ஐரோப்பாவில் முதன் முதலில் இஸ்லாமியர்களை வரவேற்ற நாடான இங்கிலாந்தின் தலைநகர் இலண்டனுக்கு தற்போது ஒரு இஸ்லாமியரே நகர பிதாவாக இருக்கின்றார்.


சிறு தாக்குதல்தான்.
பல தாக்குதல்களுடன் ஒப்பிடுகையில் இலண்டனில் நடந்தது சிறு சம்பவம் எனச் சொல்லலாம். 22-03-2017 பிற்பகல் 2.-40  ஒரு தாக்குதலாளி ஒரு மகிழூர்தியை ( a motor car that is classified as sport utility vehicle) வெஸ்ற்மின்ஸ்டர் பாலத்தின் மேலாக நடந்து சென்றவர்கள் மோதிக் கொண்டு சென்றார். அவரது வண்டி தெரு ஓரத்தில் மோதி மேலும் ஓட்ட முடியாத நிலை வந்தவுடன் கையில் இருந்த சமையலறைக் கத்தியுடன் பாராளமன்ற வளாகத்தினுள் Carriage Gates entrance ஊடாக ஓடினார். அவரைத் தடுக்க வந்த காவற்துறையாளரைக் குத்திய போது இன்னும் ஒரு காவற்துறையாளர் அவரைச் சுட்டுக் கொன்றார். கத்தியால் குத்தப்பட்ட காவற்துறையாளர் அமைச்சர் ஒருவரால் கொடுக்கப்பட்ட முதலுதவிச் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார். தெரு ஓரம் நடந்து சென்றவர்களில் இருவர் கொல்லப்பட்டன்னர் 39 பேர் மருத்தவ மனையில் சிகிச்சை அழிக்கப் படும் வகையில் காயமடைந்தனர். பிரான்ஸில் இருந்து இலண்டனுக்கு கல்விச் சுற்றுலா வந்த மாணவர்கள் சம்பவ இடத்தில் இருந்தனர். அவர்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகினர். கொல்லப்பட்ட காவற்துறையாளரின் கையில் படைக்கலன்கள் ஏதும் இருக்கவில்லை. பொதுவாக பிரித்தானியக் காவற்துறையினர் பொது இடங்களில் பாதுகாப்புக்கு நிற்கும் போது கையில் துப்பாக்கிகள் ஏதும் வைத்திருப்பதில்லை. இதை ஒரு மரபாகப் பேணிவருகின்றனர்.

சிறப்பாகச் செயற்பட்ட அவசர சேவைகள்
சம்பவம் நடந்த இடத்திற்கு மேலதிக காவற்துறையினர் விரைந்து வந்தனர். பயங்கரவாத எதிர்ப்பு அணியினர் தேம்ஸ் நதியினூடாக படகுகளிலும் வந்தனர். அவசர மரூத்து உதவிக் குழுவினரும்  வெஸ்ற்மின்ஸ்டர் பாலத்திற்க்கு அண்மையில் இருந்த மருத்துவ மனைகளில் இருந்து மருத்துவர்கள் ஓடியே வந்து சிகிச்சை வழங்கினர்.

தாற்பரியம் பெரிது
தாக்குதலாளி தெரிவு செய்த இடம் நேரம் ஆகியவற்றைப் பார்க்கும் போது தாக்குதல் அவன் அதிக அளவிலான உயிரிழப்பைக் கருத்தில் கொள்ளவில்லை. அவன் எந்த வித பயிற்ச்சி பெற்றவனாகவும் தெரியவில்லை. ஆனால் அவர் தெரிவு செய்த இடம் எல்லோர் கவனத்தையும் ஈர்கக் கூடியதாக அமைந்துள்ளது. பாதுகாப்பிற்காக பிரித்தானியப் பாராளமன்றத்தினுள் உறுப்பினர்கள் வைத்துப் பூட்டப்பட்டனர். அவர்களை மகிழ்விக்க பாராளமன்றத்தைப் பார்க்க வந்த பாடசாலை ஒன்றின் மாணவர்கள் பாட்டுப் பாடினர். தலைமை அமைச்சர் தெரெசா மே அம்மையார் பாதுகாப்பாக அவரது பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சூழவுள்ள எல்லா அமைச்சர்களின் பணிமனைகள் உட்பட எல்லாப் பணிமனைகளிலும் பணிபுரிவோர் உள் வைத்துப் பூட்டப்பட்டனர். பல முக்கிய தெருக்கள் மூடப்பட்டன. வெஸ்ற்மின்ஸ்டர் நிலக்கீழ் தொடரூந்து நிலையம் மூடப்பட்டது. உயிரிழப்பு சிறிதாகிலும் தாக்குதலின் தாற்பரியம் பெரிதாகும். பிரித்தானியாவில் இருந்து பிரிவதற்கான விவாதம் நடத்திக் கொண்டிருந்த ஸ்கொட்லாந்தின் பாராளமன்றம் இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவிக்குமுகமாக மூடப்பட்டது.எந்த நேரமும் உல்லாசப் பயணிகளால் நிரம்பி வழியும் இடத்தை தாக்குதலாளி தெரிவு செய்துள்ளான் காயப்பட்டவர்களில் தென் கொரியா, பிரான்ஸ், சீனா ஆகிய நாட்டவரும் அடங்குவர்.

தற்புகட்டல் (self- indoctrinated) தாக்குதலா?
ஆரம்பத்தில் இது ஒரு தனிப்பட்டவர் தனக்குத் தானே போதனை செய்து செய்த தாக்குதாலாகக் கருதப்பட்டது. ஆனால் இஸ்லாமிய அமைப்பு தனது படையணியைச் சேர்ந்த ஒருவர் இத்தாக்குதலைச் செய்ததாக உரிமை கோரியுள்ளது. அதன் உண்மைத் தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. உண்மையானால் இஸ்லாமிய அரசு தனது தாக்குதல் திறனில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது எனச் சொல்லலாம். இரட்டைக் கோபுரத் தாக்குதலுடன் ஒப்பிடுகையில் இலண்டன் தாக்குதல் மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம். ஐ எஸ் அமைப்பு வெளியிட்டதாகக் கருதப்படும் அறிக்கையில்:
 • "The person who implemented the attack yesterday in front of the British parliament in London was a soldier of the Islamic State and he executed the operation in response to the calls to target the sponsors of the international coalition."

பிரித்தானிய உளவுச் செயற்பாடு
மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரித்தானிய அதிக நிதியை உளவுத் துறைக்கு ஒதுக்கியுள்ளது. அவர்களிடம் உலகிலேயே சிறந்த கருவிகள் உள்ளன. இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் மற்ற ஐரோப்பிய நாடுகளை விட அதிக அளவில் பிரித்தானிய கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. இரகசிய அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. தாக்குதலாளி தொடர்பான விபரம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அவர் பிரித்தானியாவில் பிறந்தவர் எனப்படுகின்றது. ஒரு சில மணித்தியாலங்களுக்குள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை உளவுத் துறையின் சிறப்பான செயற்பாடுதான்.. ஆனால் தாக்குதலாளியை இனம் கண்டு அவரின் பெயரை அபு இஜாதீன் எனக் காவற்துறையினர் வெளிவிட்டனர். ஆனால் அவர்கள் அடையாளம் காட்டிய நபர் இப்போதும் பிரித்தானியச் சிறையில் இருக்கின்றார். பிரித்தானியாவில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடக்கவில்லை. 2005 ஜூலை மாதம் நடந்த தக்குதலில் 4 தாக்குதலாளிகளும் 52 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் பிரித்தானிய உளவுத் துறை தீவிரவாத ஆதரவாளர்களிடையே தமது உளவாளிகளை ஊடுருவச் செய்தனர். அதன்மூலம் பல கைதுகள் செய்யப்பட்டன. அது பல தாக்குதல்களை முறியடித்தது. தாக்குதல் நடந்த மறுநாள் பாராளமன்றத்தில் உரையாற்றிய தெரெசா மே அம்மையார் தாக்குதலாளி உளவுத் துறையான MI-5இற்கு தெரிந்தவர் என்றும் தீவீரவாத ஆதரவாளராக இனம் காணப்பட்டவர் என்றும் தெரிவித்தார்.

ரிஷி மூலம் நதி மூலம் பார்க்க மாட்டார்கள்
தீவிரவாத தாக்குதல்களுக்கு அல் கெய்தா, தலிபான், இஸ்லாமிய அரசு (ஐ. எஸ்) ஆகிய அமைப்புகள் மீது குற்றம் சாட்டிவிட்டு இருந்து விடுவார்கள்.  இஸ்லாமிய தீவிரவாதத்தின் மூலம் இரண்டு இடங்களில் இருக்கின்றது ஒன்று சவுதி அரேபியா முன்னெடுக்கும் சலாபிசம். மற்றது இஸ்ரேல் அரேபியர்களுக்கு எதிராகச் செய்யும் இனவழிப்பு. இரண்டும் மேற்கு நாடுகளின் நட்பு நாடுகள்.  பிரித்தானியாவின் எக்கொனமிஸ்ற் சஞ்சிகையில் பின்னூட்டத்தில் ஒரு இஸ்லாமியர் இப்படிக் குறிப்பிடுகின்றார்:
 • Please try to remember that this scum is a salafist scum. Not Muslims. Salafism is an aberration of Islam. A parasite ideology. Parasiting on Islam
இன்னொருவர் தனது பின்னூட்டத்தில் அல்லாமீது நம்பிக்கை அற்றவர்களைக் கொல்லும்படி முகம்மது நபி குரானில் சொன்னதைக் குறிப்பிட்டுள்ளார்:
 •  Quran (9:5):"Slay the unbelievers wherever you find them, and take them captive, and besiege them and prepare for them each ambush".
மேற்கு நாடுகளின் இன்னொரு நட்பு நாடான துருக்கியின் அதிபர் ஐரோப்பியர் தங்கள் தெருக்களில் நிம்மதியாக நடமாட முடியாது என இலண்டன் தாக்குதலுக்கு ஒரு சில நாட்களின் முன்னர் தெரிவித்திருந்தார்.

பிந்தி வந்த செய்திகளின் படி:
தாக்குதலாளியின் பெயர் காலிட் மசூட். இவர் பிரித்தானியாவின் Kent  இல்  பிறந்தவர். இவரது இயற்பெயர் Adrian Russell ஆகும். ஐரோப்பியரான இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டவராவார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இரருக்கு வயது 52. இவர் தனது தாக்குதலுக்கு ஒரு மகிழூர்தையை வாடகைக்குப் பெற்றிருந்தார்.  இவரது தாக்குதல் தொடர்பான எந்தத் தகவலும் உளவுத்துறைக்குக் கிடைத்திருக்கவில்லை. ஏற்கனவே பிரித்தானியாவில் இவர் குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.

சிறையில் போதிக்கப்பட்டாரா?
தாக்குதலாளி கைத்தி வைதிருந்தமை, போதைப் பொருட்கள் வைத்திருந்த குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர். பிரித்தானியச் சிறைக்கு பல்வேறுபட்ட மத போதகர்கள் சென்று போதலை செய்வதுண்டு.  சிறையில் இருக்கும் போது தாக்குதலாளி இஸ்லாமிய மத போதகரால் மனமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் செய்திகள் வெளிவந்தன. சிறையில் இருந்து வெளிவந்தவுடன் அவர் தனது பெயரை மாற்றி இஸ்லாமிய மதத்தைத் தழுவிக்கொண்டாராம்.

அவ்வப்போது இந்தப் பதிவு புதுப்பிக்கப்படும்.

Wednesday, 22 March 2017

உலக ஆதிக்கப் போட்டியில் நுழைவு எதிர்ப்பும் பிரதேச மறுப்பும் - Anti-Access/Area Denial

உலகின் பல நாடுகள் தமது தரை மற்றும் கடல் பிரதேசங்களை அந்நியர்கள் ஆக்கிரமிக்காமல் இருக்க மேற்கொள்ளும் உபாயங்களை “Anti-Access/Area Denial strategy” என அழைக்கப்படுகின்றன. அதை “நுழைவு எதிர்ப்பும் பிரதேச மறுப்பும்” எனச் சொல்லலாம். இதை இலகு படுத்திச் சொல்வதானால் இது நம்ம ஏரியா உள்ளே வராதே என்னும் நிலைப்பாடாகும். இது சுருக்கமாக A2/AD என அழைக்கப்படுகின்றது. இந்த உபாயத்தை வகுப்பதையும் அந்த உபாயத்தை உடைப்பதையும் அடிப்படையாகக் கொண்டே பல புதிய படைக்கலன்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எல்லா நாடுகளினதும் பாதுகாப்புச் செலவின் பெரும்பகுதி இதற்காகவே செலவிடப்படுகின்றன. புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்புத்துறை ஆய்வுக் கட்டுரைகள் “நுழைவு எதிர்ப்பும் பிரதேச மறுப்பும்” என்னும் சொற்தொடர் இல்லாமல் இருப்பதில்லை.

வல்லரசு நாடுகள் உட்படப் பல நாடுகளின் “நுழைவு எதிர்ப்பும் பிரதேச மறுப்பும் உபாயத்தை உடைக்கும் வல்லமையை அமெரிக்காவிற்குக் கொடுப்பது அதன் கடல்சார் படையணிகளாகும். கடற்படை என்பது பல நாடுகளில் இரு வகையானவை. ஒன்று கடற்படை அது கடலில் மட்டும் செயற்படக் கூடியது. மற்றையது கடல்சார்படை(Marines). கடல்சார் படை கடலை முக்கிய தளமாகக் கொண்டு செயற்பட்டாலும் அது தரையிலும் வானிலும் போர் புரியக் கூடியவகையில் படைக்கலன்களையும் பயிற்றப்பட்ட படையினரையும் கொண்டுள்ளது. அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தில் அதன் கடல்சார்படை பெரும் பங்கு வகிக்கின்றது.18-ம் நூற்றாண்டில் பிரித்தானியப் பேரரசுக்கு எதிரான அமெரிக்க சுந்தந்திரப் போரில் இருந்து ஈராக் போர் வரை அமெரிக்காவின் அமெரிக்காவின் கடல்சார் படையினரே மிகப்பெரும் பங்கு வகித்தனர்.

கடற்படையும் கடல்சார் படையும்
பனிப்போர் காலத்தில் சோவியத் ஒன்றியத்திற்கு சவாலாகவும் சீனாவின் விரிவாக்கத்திற்குப் பெரும் தடையாக இருப்பதும் அமெரிக்காவின் கடல்சார்படையணிகள் தான். உலகக் கப்பல் போக்குவரத்திற்கான காவற்துறை மாஅதிபராக அமெரிக்கா தன்னைத் தானே நியமித்தமைக்கு அதன் கடல்சார்படையணி இணையற்ற ஒன்றாக இருப்பதனாலேயே.  இதன் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே அமெரிக்காவிடம் இருக்கும் பத்து விமானம் தாங்கிக் கப்பல்களை மேலும் இரண்டால் அதிகரிக்க ஒத்துக் கொண்டார். அமெரிக்கா தனது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35ஐ உருவாக்கும் போது கடல்சார்படைக்கு ஏற்பவும் அது வடிவமைக்கப்பட்டது. அதனால் பெரும் பொருட் செலவையும் பின்னடைவையும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை சந்திக்க வேண்டியிருந்தது.

ஆக்கிரமிக்கப்படுதலை வரலாறாகக் கொண்ட சீனா
சீனாவின் வரலாற்றில் அது 470 தடவைகள் ஆக்கிரமிக்கப்பட்டது. அதில் 74 தடவைகள் கடல்வழியாக அது ஆக்கிரமிக்கப்பட்டது. தனக்கு என ஒரு உறுதிமிக்க என் பிராந்தியம் உள்ளே வராதே என்ற பாதுகாப்பு அரணை அமைப்பதில் சீனா அதிக கவனம் செலுத்துகின்றது. சீனாவின் வரலாற்றை ஆய்வு செய்த படைத்துறை நிபுணர்கள் அது தொழில்நுட்ப ரீதியில் எதிரியிலும் பார்க்கப் பிந்தங்கிய நிலையில் இருந்தமையே அது ஆக்கிரமிக்கப் பட்டதற்கான முக்கிய கரணமாக இனம் கண்டுள்ளனர். பொதுவுடமைப் புரட்சிக்கு முந்திய நூறு ஆண்டுகளை சீனாவின் மானபங்கப்பட்ட நூற்றாண்டு என்கின்றனர் சீன சரித்திரவியலாளர்கள். சீனாவை மானபங்கப் படுத்திய பிரித்தானியா. அதை மோசமாக மான பங்கப்படுத்திய நாடு ஜப்பான். தன்னிலும் பார்க்க தொழில்நுட்பத்தில் அதிக மேம்பட்ட எதிரியும் எப்படி மோதுவது என்பதே சீனா நூறு ஆண்டுகளுக்கு மேலாக எதிர் கொண்டு வரும் பிரச்சனையாகும்.


கடல்சார் படையை அதிகரிக்கும் சீனா
சீனா தனது கடல்சார் படையினரின் எண்ணிக்கையை இருபதினாயிரத்தில் இருந்து ஒரு இலட்சமாக அதிகரிக்கவிருக்கின்றது. சீனா டிஜிபுத்தியிலும் பாக்கிஸ்த்தான் குவாடரிலும் உள்ள துறைமுகங்களிலும் தனது கடல்சார் படையினரை அதிகரிக்கவிருக்கின்றது. சினாவின் தரைப்படையில் உள்ள தாக்குதல் நடவடிக்கைகளில் பயிற்ச்சி பெற்றவர்களை கடல்சார் படைக்கு மாற்றி அவர்களுக்கு கடல்சார் நடவடிக்கைகளிலும் மேலதிகப் பயிற்ச்சி வழங்கியுள்ளது.

தொழில்நுடப்த்தைப் பாவிக்கத் தவறிய சீனா
காகிதம், அச்சு இயந்திரம், திசையறிகருவி, வெடி மருந்து போன்றவற்றைக் கண்டு பிடித்த சீனா அந்த தொழில்நுட்ப மேம்பாட்டைப் பயன்படுத்தி தனது உலக ஆதிக்கத்தை உயர்தத் தவறியது. ஒன்பதாம் நூற்றாண்டில் சீனா வெடிமருந்தைக் கண்டு பிடித்தது. அதை அம்புகளில் வைத்து வில்மூலம் எதிரிகளில் ஏவியது. ஆனால் 13-ம் நூற்றாண்டில் சீனா மொங்கோலியர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டது. சீனாவை ஆக்கிரமித்த மொங்கோலியர் அங்கிருந்து இந்தியாவையும் கைப்பற்றினர். இந்தியாவில் இரும்புக் குழாய்க்குள் வெடிமருந்தை வைத்து மைசூரியன் ரொக்கெட் என்னும் எவுகணை முதலில் உருவாக்கப்பட்டது. பின்னர் இந்தியாவில் இருந்து மேற்கு ஆசிய மற்றும் வட ஆபிரிக்க நாடுகளுக்கு வெடிமருந்து வர்த்தக அடிப்படையில் பரவலானது. வர்த்தக ரீதியாக வெடிமருந்து கடைசியாகப் போன இடம் ஐரோப்பாவாகும்.

களவாடலும் பிரதி பண்ணலும்
சீனா தனக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள தொழில்நுட்ப இடைவெளியை நிரப்ப பலவழிகளில் முயல்கின்றது. சீனா ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையினதும் தனியார் துறையினதும் தொழில்நுட்ப இரகசியங்களை திருடிக் கொண்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டு அமெரிக்காவில் பரவலாக முன்வைக்கப்படுகின்றது. இரசியாவிடமிருந்து வாங்கிய படைக்கலன்களையும் போர்விமானங்களையும் பிரதிபண்ணி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கின்றது.

அமெரிக்கக் கழுகுப்பார்வை
அமெரிக்காவின் MQ-4C Triton unmanned aircraft system என்னும் ஆளில்லாப் போர்விமானத்தால் உலகின் எல்லாக் கடற்பரப்பையும் கண்காணிக்க முடிவதுடன். எதிரி விமானங்களின் நடமாட்டத்தையும் அறிந்து கொள்ள முடியும். இதன் மென் பொருள் அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதாமல் பார்த்துக்கொள்ளும். 40 அடி உடலையும் 131 அடி இறக்கைகளையும் கொண்ட MQ-4C Triton ஆளில்லா விமானங்கள் உலகின் வேறு வேறு பாகங்களில் உள்ள ஐந்து தளங்களில் இருந்து செயற்படவிருக்கின்றன. இவற்றால் 50,000 அடி உயரமாகவும்  மிகவும் தாழ்வாகவும் பறக்க முடியும் அத்துடன் மிகவும் பரந்த கடற்பரப்பை கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும். தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு மேல் இவற்றால் பறக்க முடியும். மிகவும் உயர்ந்ததர உணரிகளாலும் ஒளிப்பதிவுக் கருவிகளாலும் திரட்டப்படும் தகவல்களை இவை உலகெங்கும் உள்ள அமெரிகக் கடற்படைத் தளங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதானால் உலகக் கடற்பரப்பு எல்லாவற்றையும் அமெரிக்கக் கடற்படையால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும்.

இரசியாவும் உக்ரேனும்
மேற்கு நாடுகள் தமது சதியால் உக்ரேனில் தமக்கு சாதகமான ஆட்சியாளர்களை அமர்த்தி உக்ரேனை நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைக்க முயலுகையில் இரசியா அதிரடியாக கிறிமியாவைத் தன்னுடன் உயிரிழப்பு ஏதுமின்றி இணைத்தமைக்கு கிறிமியாப் பிராந்தியத்தில் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தமையும் அங்கு ஏற்கனவே இருந்த இரசியக் கடற்படைத்தளமும்தான் காரணம். இரசியா அந்தப் பிராந்தியத்தில் ஒரு சிறந்த நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை நிறுவி இருந்தனால் இரசியாவால் இதைச் சாதிக்க முடிந்தது. சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சி ஆட்டம் காணும் தறுவாயில் இருக்கையில் இரசியா தனது விமானப் படைத்தளத்தை சடுதியாக அமைத்தமை ஒரு நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை அங்கு உருவாக்கியது. இரசியாவுடன் நேரடி மோதலை விரும்பாத அமெரிக்கா அங்கு ஏதும் செய்ய முடியாத நிலையை உருவாக்கப்பட்டது. இதனால் அமெரிக்கா தனது ஆதரவுப் படைகளை சிரியாவிலும் ஈராக்கிலும் பாதுகாப்பதிலும் மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை இரசியா ஆக்கிரமிக்காமல் தடுப்பதிலும் அதிக கவனம் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டது. இது அமெரிக்காவின் கிழக்குச் சீனக் கடல் மீதான கவனத்தைத் திசை திருப்பியது. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சீனா தான் தென் சீனக் கடலில் நிர்மாணித்த தீவுகளில் தன் விமானப்படையையும் கடற்படையையும் கொண்டு போய் நிறுத்தியது. இச் செயற்கைத் தீவுகள் படைத்துறை நோக்கங்களுக்குப் பயன்படுத்தப் பட மாட்டாது என்ற உறுதி மொழியை சீனா காப்பாற்றாமல் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது.

கிழக்கு ஐரோப்பா, மேற்காசியா, தென் சீனக்கடல்
இரசியா உக்ரேனில் செய்த நடவடிக்கைகளால் நேட்டோ நாடுகள் தமது  நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை மீளாய்வு செய்ய வைத்தது. இதனால் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நேட்டோப்படையினரின் போர்த் தளபாடங்களும் படைக்கலன்களும் தேவை ஏற்படின் துரிதமாகப் பாவிக்கக் கூடிய வகையில் களஞ்சியப்படுத்தப்பட்டன. இரசியாவின் படைநகர்வுகளை முன் கூட்டியே உணர்ந்து கொள்ளக் கூடியவகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன். ஆக்கிரமிப்புப் படைகளை தடுக்கக் கூடிய வகையில் சிறு படையணிகள் நிறுத்தப்பட்டன. ஒரு சில மணித்தியாலங்களுள் பெரும் படையணிகளை இரசியாவால் ஆக்கிரமிக்கப்படும் நேட்டோ நாடுகளில் கொண்டு போய் இறக்கக் கூடிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. பிரித்தானியா ஆங்கிலக் கால்வாயினூடான சுரங்கப் பாதையில் தனது போர்த்தாங்கிகளை நகர்த்தும் பயிற்ச்சியில் ஈடுபட்டதுஇரசியாவின் நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை முறியடிக்கக் கூடிய வகையில் நேட்டோப் படைகளின் தொலைதூரத் துல்ல்லியத் தாக்குதல் ஏவுகணைகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

ஏவுகணை எதிர்ப்பு முறைமையும் லேசர் படைக்கலன்களும்
உலகின் பல முன்னணி நாடுகள் ஏவுகணை எதிர்ப்பு முறைமைக்கு பெரும் செலவு செய்வது ஒரு சிறந்த நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை உருவாக்கவே. சீனா ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளை உருவாக்குவது எதிரியின் நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை உடைக்கவே. அமெரிக்கா தாட் என்றும் இரசியா எஸ்-300, எஸ்-400 என்றும் ஏவுகணைகளை அவசர அவசரமாக உருவாக்கியதும் நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை உருவாக்கவே. தற்போது அமெரிக்காவும் இரசியாவும் போட்டி போட்டுக் கொண்டு லேசர், மைக்குறோவேவ் படைக்கலன்களை உருவாக்கிக் கொண்டிருப்பது எதிரியின் நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை நொடிப்பொழுதில் நிர்மூலமாக்கவே.

சீனாவிடம் மைக்குறோவேவ் படைக்கலன்கள்

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கிய மைக்குறோவேவ் படைக்கலன் EMP/high powered microwave cruise missiles என அழைக்கப்படுகின்றது. இது எதிரியின் எல்லா இலத்திரனியல் உபகரணங்களையும் செயலிழக்கச் செய்யும். எதிரியின் தொடர்பாடல்கள், ஏவுகணைகள், ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள், ரடார்கள் உட்படப் பல விதமான கருவிகளை மைக்குறோவேவ் செயலிழக்கச் செய்யும். பல படைக்கலன்களை எரித்துக் கருக்கும். இதனால் எதிரியின் “நுழைவு எதிர்ப்பும் பிரதேச மறுப்பும்” முறைமையச் சாம்பலாக்க முடியும். இதேபோன்ற படைக்கலன்களை சீனாவும் உருவாக்கிப் பரீட்சித்துள்ளது. லேசர் படைக்கலன்களை உருவாக்குவதிலும் சீனா கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அமெரிக்காவின் படைத்துறை வளர்ச்சியை சமாளிக்க சீனா எடுக்கும் நடவடிக்கைகள் இந்தியாவை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றது. இந்தியாவிற்கு அருணாச்சலப் பிரதேசத்துக்கு என ஒரு “நுழைவு எதிர்ப்பும் பிரதேச மறுப்பும்” உபாயம் அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்படுகின்றது. 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...