Saturday 5 December 2009

கறிவேப்பிலையாக சரத் பொன்சேக்கா.


முதலாளித்துவவாதிகள் அரசியலில் தனி ஒரு நபர் செல்வாக்குப் பெறுவதை விரும்புவதில்லை. அப்படி யாராவது செல்வாக்குப் பெற்றால் அவர்களின் கடந்தகால அல்லது நிகழ்காலத் தவறுகளை முதலாளித்துவப் பத்திரிகைகள் அம்பலப் படுத்தி அவர் செல்வாக்கைச் சரித்துவிடும். அண்மையில் இப்படிப் பலியானவர்களில் ஒருவர் பில் கிளிண்டன்.

வெற்றிக் கனியைப் பறிப்பதா? பங்கு போடுவதா?
இலங்கைப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப் பட்டதால்(?) மஹிந்த ராஜபக்சே இலங்கையில் பெரும் புகழ் பெற்றார். அந்தப் புகழை மட்டுமே வைத்துக் கொண்டு அவரால் ஆட்சி செய்ய முடியும் எவருடைய அல்லது எந்த நாட்டினுடைய வற்புறுத்தலுக்கோ வேண்டுகோள்களுக்கோ செவிசாய்க்காமல் அவரால் ஆட்சி செய்ய முடியும். போதாக்குறைக்கு மஹிந்த ஒரு சீன ஆதரவாளர். அவர் தனக்கு ஏற்பட்ட புதுப் புகழைப் பயன் படுத்தி குடியரசுத் தேர்தலை நடத்தி தனது புகழுக்கான அறுவடையைச் செய்ய முயன்றார். இவரது வெற்றிக் கனியை பறிக்க முடியாத அமெரிக்கா அதைப் பங்கு போட ஒரு வழியைக் கண்டு பிடித்தது. அதற்காக அமெரிக்க எந்தச் சிரமமும் படும் தேவையும் இருக்கவில்லை. சந்தர்ப்பம் அதன் காலடியில் சரத் பொன்சேக்கா வடிவில் பச்சை அட்டையுடன் கிடந்தது. மிக இலகுவாக சரத்தைப் பயன் படுத்திக் கொண்டது.

தேர்தல் வந்தால் தோல்வி நிச்சயம் என்று துவண்டு கிடந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஒரு துருப்புக் கிடைத்தது அமெரிக்காவிடம் இருந்து. ஆரம்பத்தில் இந்தியா ரணிலைத் தன்பக்கம் இழுக்க முயற்ச்சித்தது. அப்போது ரணில் சரத் பொன்சேக்காவை பொது வேட்பாளராக்க பல நிபந்தனைகளை விடுதார். அந்நிபந்தனைகளின் படி சரத் தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவர் முறைய ஒழித்து வெஸ்ற் மின்ஸ்டன் பாணி அரசியலமைப்பை உறுவாக்க வேண்டும். சொந்தமாக அரசியல் கட்சி இல்லாத சரத் பின்னர் செல்லாக் காசாக்கப் பட்டு விடுவார்.

அமெரிக்காவின் சதி
ரணில் விக்கிரமசிங்க பின்னர் மிக இலகுவாகவும் பெரிய பேச்சு வார்த்தைகள் எதுவும் நடக்காமலும் சரத் பொன்சேக்காவை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டார். இலங்கையின் பழம்பெரும் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க எப்படி இதற்கு ஒத்துக் கொண்டார்? இதன் பின் அமெரிக்காவின் தந்திரம் சிறப்பாகச் செயற்படுகிறது. பொன்சேக்கா-ராஜபக்சே கூட்டணியை பிரித்ததின் மூலம் அமெரிக்கா பல போர்குற்றத் தகவல்களை திரை மறைவில் இலகுவாகப் பெற்று விட்டது. அத்துடன் நிற்கவில்லை அமெரிக்காவில் வசிக்கும் பொன்சேக்காவின் மகளும் மருமகனும் செய்த ஆயுத பேரக் குளறு படிகளை அமெரிக்கா திரட்டிவிட்டது. அமெரிக்கவைப் பொறுத்தவரை சரத் பொன்சேக்கா ஒரு ஒத்திவைக்கப் பட்ட சிறைக் கைதி. சரத் பொன்சேக்கா அமெரிக்காவின் கைப்பொம்மையாகச் செய்ற்படுவதைத் தவிர வேறு வழியில்லை. அவருக்கென்று ஒரு கட்சி இல்லை. அவர் ஆட்சி அமைத்து மந்திரி சபை அமைப்பதானால் அவர் ரணில் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். அப்போது அமெரிக்காவின் அடுத்த இலக்கான ஜேவிபிக்கு சில மந்திரிப் பதவிகளைக் கொடுத்து அதைப் பிளவு படுத்த முடியும். அதைத் தொடர்ந்து பல பிரபல சிங்கள் அரசியல்வாதிகளை ரணில்-சரத் கூட்டணியில் இணைத்து பாராளமன்றத் தேர்தலில் பெரு வெற்றியை ஈட்ட முடியும். அதில் ரணில் விக்கிரமசிங்கவின் யூஎன்பி கட்சிதான் பிரதான கட்சியாக அமையும். அப்போது அரசமைப்பை மாற்றி குடியரசுத் தலைவர் முறை ஒழிக்கப் பட்டு சரத் பொன்சேக்கா கறிவேப்பிலை போல் தூக்கி எறியப்படுவார். ஆக மொத்தத்தில் சர்த் பொன்சேக்கா அமெரிக்காவிற்கு வெற்றி தேடிக் கொடுக்கப் போகிறார்.

Friday 4 December 2009

திராணி இல்லாத இந்தியாவின் திருகுதாளம் மீண்டும் ஆரம்பம்.


இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இந்திய "ராஜ்ய சபா"வில் ஒரு புலம்பல் செய்துள்ளார். இலங்கைப் பிரச்சனைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காணவேண்டும் என்பதுதான் அந்த பிதற்றல். இலங்கையின் இனப் பிரச்சனைக்கு இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வுகாணா வேண்டுமாம். அவரது உரையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் முக்கால் வாசிக்கு மேற்பட்டவர்களுக்கு 13வது திருத்தம் என்றால் என்ன வென்றே தெரியாது. அமைச்சருக்கே அதைப் பற்றி ஏதாவது தெரியுமா என்பது சந்தேகம். அவரது உதவியாளர்கள் சொன்னதைச் சொல்லியிருக்கலாம்.

பலபலி எடுத்த 13வது திருத்தம்
இலங்கைக்கு இந்தியா அமைதிப்படை என்னும் வெறி நாய்களை அனுப்பி பல கொலைகள் கற்பழிப்புகள் சொத்தழிப்புகள் செய்து இலங்கையின் அரசியல் அமைப்பில் 13வது திருத்தம்(திருகுதாளம்) செய்யப் பட்டது. அந்த ஒப்பந்தம் செய்யும் போதே இலங்கைக்கு இந்தியா திரைமறைவில் சொல்லிவிட்டது இதை நிறைவேற்றத் தேவையில்லை என்று. இன்றுவரை அது நிறைவேற்றப் படவில்லை. அதை நிறைவேற்ற இதுவரை இந்தியா இலங்கைக்கு எந்த வற்புறுத்தல்களும் மேற்கொள்ளவில்லை. 22வருடங்களாக அதை நிறைவேற்றத் திராணியில்லாத இந்தியா இபோது மீண்டும் அதைப் பற்றிப் பிதற்றுகிறது. அதற்கும் அப்பால் சென்று தீர்வுகாணவேண்டுமாம். கூரையில் ஏறிக் கோழி பிடிக்க திராணியில்லாத இந்தியா வானத்தில் ஏறி வைகுண்டம் காட்டப் போகிறதாம்.

அதிகாரப் பரவலாக்கம் என்பது கெட்டவார்த்தை
சிங்களவர்களைப் பொறுத்தவரை அதிகாரப் பரவலாக்கம் என்பது மிகமிக கெட்டவார்த்தை. அதை பற்றிப் பேசுபவர்கள் தேசத் துரோகிகிள். 13வது திருத்தம் என்பது அதிகாரத்தில் சிறிதளவு பரவலாக்கம் செய்கிறது. ஆனால் ஒட்டு மொத்த முழு அதிகாரமும் இலங்கை குடியரசுத் தலைவரிடமும் இலங்கைக் பாராளமன்றத்திடமும் இருக்கும்.

வாக்குறுதியை மீறிய அயோக்கிய இந்தியா
இலங்கையின் வடகிழக்கு மகாணங்களை இணைத்து தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் வழங்கப் படும் என்று வாக்குறுதி அளித்த இந்தியா வடகிழக்கை பிரித்தபோது எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்து தமிழர்களுக்கு துரோகம் செய்தது. இலங்கைத் தமிழர்களின் ஆயுதக் குழுக்களை ஆயுதங்களை கையளிக்கும் படியும் இலங்கைத் தமிழர்களின் பாது காப்புக்கு தான் பொறுப்பு என்றும் 1987இல் உறுதி கூறிய இந்தியா அதன் பின் இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழர்கள் கொல்லப் படுவதற்குக் காரணமாக இருந்தது. இப்படிப்பட்ட அயோக்கியத்தனம் உலகில் எங்கு நடந்தது?

இன்னும் ஒரு திருகுதாளம்.
இப்போது இந்தியா "13வது அரசியல் அமைப்பிற்கு அப்பால்......" என்ற பதத்தைப் பாவிப்பது இன்னும் மோசமான துரோகத்தை தமிழர்களுக்கு செய்ய இந்திய மலையாளப் பார்பனக் கொள்கை வகுப்பாளர்கள் தயாராகுகிறார்கள் என்றே எடுக்க வேண்டும்.

Thursday 3 December 2009

மணமேடையில் இருந்து மாமியார்களால் அடித்து இழுத்துச் செல்லப் பட்ட மணமகன்.


நாற்பது மணமக்களுக்கு ஒரே மேடையில் திருமணம். நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்பால் வந்தது தொல்லை ஒரு மணமகனுக்கு. அம் மணமகன் தன் மனைவியாகப் போகிறவரிடம் கொஞ்சிக் கொண்டிருந்த வேளையில் திடீரென பின்புறமாக வந்த சில குண்டுப் பெண்டுகளால் தாக்கப் பட்டார். அவர் என்ன நடக்கிறது என்று உணர முன்னரே தற தறவென அக்குண்டுப் பெண்கள அவரை தாக்கியபடி இழுத்துச் சென்றனர். அவர் செய்தது ஒரு சிறு தவறுதான். ஏற்கனவே திருமணமானதுதான் அத் தவறு. இவர் திருமணம் செய்ய விருப்பதை தொலைக்காட்சியில் பார்த்த அவரது மாமியார் தனது சகோதரிகள் சகிதம் அங்கு விரைந்து கைவரிசையைக் காட்டினார். இது நடந்தது பெரு(Peru) நாட்டில்.

அத்துடன் அந்த மாமியார்கள் விடவில்லை. மருமகன்மீது தன் குடும்பத்திற்கு எதிராகக் குற்றமிழைத்ததாக வழக்கும் பதிவு செய்தார்.

எல்லா மாமியார்களும் இப்படி இருந்தால் பெண்கள் ஏமாற்றப் படுவார்களா?

இதன் காணொளியைக் காண கிழே உள்ள முக்கோணத்தில் சொடுக்கவும்.

அல்லது இந்த இணைப்பிற்கு செல்லவும்: மணமகன்.

இலங்கையில் இந்தியாவின் பலமுனைக் காய் நகர்த்தல்கள் பலன் தருமா?


இந்தியா தனது இலங்கை தொடர்பான கொள்கையை என்றுமே சரியாக நிர்ணயித்ததில்லை. இது பலகாலமாக நடந்து வருகிறது. தமிழரசுத் தந்தை செல்வநாயகம் சிறீமாவோ பண்டாரநாயக்கா லால்பகதூர் சாஸ்த்திரியை மிரட்டி சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் கையொப்பம் இடவைத்தார் என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கையை இந்தியாவால் மிரட்ட முடிந்த ஒரு காலகட்டம் இருந்ததென்றால் அது தமிழ் போராளிக் குழுக்கள் பலம் பெற்றிருந்த எழுபதுகளின் பிற்பகுதியும் எண்பதுகளின் முற்பகுதியுமே. பின்னர் இந்தியாவில் ஆட்சிக்கு வலுகட்டாயமாக இழுத்து வரப்பட்ட ராஜீவ் காந்தியும் அவரது ஊழல் நிறைந்த ஆலோசகர்களும் எல்லாவற்றையும் கோட்டை விட்டு விட்டார்கள். அப்போதைய முக்கிய இந்திய அதிகாரி ஒருவரின் மகளின் திருமணச்செலவை இலங்கை அரசு பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் கொழும்பில் பேசிக் கொள்வர். அவரே இந்திய வெளியுறவுக் கொள்கையை தமிழருக்கு எதிரானதாகவும் சிங்களவர்களுக்கு சாதகமானதாகவும் மாற்றினார். அதற்கு அவர் ராஜீவ் காந்திக்கு காட்டிய பூச்சாண்டி: இலங்கைத் தமிழர்கள் சுதந்திரம் பெற்றால் இந்தியாவில் தமிழ்நாடு தனிநாடாகப் பிரிந்துவிடும். தனது தாயின் செல்வாக்கைப் பாவித்தே அவர் விமான ஓட்டியாகும் தகுதி பெற்றார் என முன்னாள் இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாயால் விமர்சிக்கப் பட்ட அரசியல் அறிவில்லாத ராஜீவ் கந்தி என்னும் நேரு குடும்பந்துக் குழந்தையும் அந்த பூச்சாண்டிக்குப் பயந்து செயல்பட்டது.

இப்போது இருக்கும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் பொதுவாக கேரளத்தைச் சேர்ந்த தமிழ் விரோதிகள். சாதி வெறியர்கள். இவர்களின் தமிழ்விரோதப் போக்கும், தமது சாதிய ஆதிக்க வெறியும், அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் சேலை அணிந்த முசோலினியின் (உண்மையில் தன் கணவன் கொலையில் என்ன நடந்தது என்று அறியாமல்) பழிவாங்கத் துடிக்கும் மனப்பான்மையும் இணைந்து தமிழர்களை கொன்று குவிக்க சிங்களவர்களுக்கு உதவியது. இவர்கள் இந்தியாவின் பிராந்திய நலனைக் இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பின் போது கருத்தில் கொள்ளவில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரின்போது இந்திய உதவி மிகவும் இலங்கைக்குத் தேவைப் பட்டது. அதனால் இலங்கை தான் இந்தியாவின் ஆதிக்கத்து உட்பட்டு இருப்பது போல் நாடகமாடியது. இதனால் இலங்கையின் போருக்குப் பின் இந்தியா இலங்கையின் மீது தொடர்ந்து தனது பிடியை தக்க வைக்க பலவிதத்தில் முனைகிறது. இலங்கையில் போர் முடிந்து விடுதலைப் புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப் பட்டபின் நிற்கதியாக்கப் படும் தமிழர்கள் வேறு வழியின்றி:

  • இந்தியாவின் துணையை நாடுவார்கள்.
  • தனது அடிவருடிகளைத் தலைவர்களாக ஏற்பார்கள்.
  • தாம் சொல்வதைக் கேட்பார்கள். என்று கணக்குப் போட்டது இந்தியா.
போர் நடந்து கொண்டிருக்கும் போது நோர்வேயின் எரிக் சொல்ஹெய்மின் மூலம் இலண்டனில் உள்ள தமிழர்களிடம் போருக்குப் பின் என்ன செய்வீர்கள் என்று அறிய இந்தியா முற்பட்டது. எதுவும் இந்தியா நினைத்தபடி நடக்கவில்லை. உலகெங்கும் வாழ் தமிழர்களில் பலர் (தமிழ்நாடு உட்பட) பல விதத்திலும் குழம்பி இருந்தாலும் ஒன்றில் தெளிவாக இருக்கிறார்கள்: தமிழர்களின் முதல் எதிரி இந்தியா. இது இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைக் கழகத்தில் சினாவுடன் இணைந்து இந்தியா சிங்களவர்களுக்கு ஆதரவாகச் செயல் பட்டதன் மூலம் உறுதியாக்கப் பட்டுவிட்டது. தமிழர்கள் தன் பக்கம் திரும்பாததால் குழம்பிப்போன இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் பல காய்நகர்த்தல்களை மேற் கொள்கின்றது. அதுமட்டுமல்ல சரத் பொன்சேக்காவிற்கும் ராஜபக்சே குடும்பத்திற்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை இந்தியா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தத் தவறியது. அதை அமெரிக்கா வழமைபோல் மிகச் சாதுரியமாகப் பயன் படுத்தியது.

சிங்களவரின் இந்திய விரோதத்தை உணராத இந்தியா.
அமெரிக்கா சரத் பொன்சேக்காவைத் தன்வசம் ஆக்கி அவரை ர்ணில் விக்கிரமசிங்கவுடன் இணைக்க இந்தியா ரணிலை டெல்லிக்கு அழைத்து தன் வசமாக்க முற்பட்டது. அமெரிக்காவா இந்தியாவா என்ற கேள்வி வரும்போது சிங்களவர்கள் அமெரிக்காவைத்தான் தெரிவு செய்வார்கள் என்பதை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் என்றுதான் உணர்வார்களோ? ரணில்-சரத் கூட்டணியில் ஜனதா விமுக்திப் பெரமுனையை இணைய விடாமல் தடுக்க இந்தியா திரை மறைவில் முயன்றது. இதை அறிந்த ஜனதா விமுக்திப் பெரமுனையான சீன ஆதரவுக் கட்சி சரத்-ரணில் கூட்டணி இந்தியாவிற்கு எதிரானது என உணர்ந்து நிபந்தனை இன்றி அக்கூட்டணியில் இணைந்து இந்தியாவின் முகத்தில் கரி பூசியது. சிங்களவர்களின் இந்திய விரோதப் போக்கை என்றுதான இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்வார்களோ?

சூரிச் மாநாடு.
சிங்களவர்களால் கைவிடப் பட்ட இந்தியா தமிழ் அரசியல் கட்சிகளை சுவிற்சலாந்துக்கு அழைத்து சூரிச் நகரில் ஒரு மாநாடு நடாத்தி தமிழர்களைத் தன் பக்கம் திரட்டி அதன் மூலம் இலங்கையில் தனது பிடியைச் சற்று செலுத்தலாம் என்று கணக்கும் போட்டது இந்தியா. அதுவும் படு தோல்வியில் முடிவடைந்தது. பல முதிய தமிழர்களின் அடிமனதில் ரணிலின் யூஎன்பி கட்சியில் ஒரு விருப்பு உள்ளது. இது பல வலது சாரித் தமிழ்த் தலைவர்களாலும் ஊடகங்களாலும் ஏற்படுத்தப் பட்டது. இத்தமிழர்களின் வாக்கு ரணில்-சரத் கூட்டணிக்குப் போகாமல் இருக்க இந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு குடியரசுத் தலைவருக்கு போட்டியிடும் படி இந்தியா கட்டளையிட்டுள்ளதாக கூறப் படுகிறது. ஏற்கனவே இடது சாரித் தமிழர்களின் வாக்கை தமிழ்த் தேசிய போராட்டத்தின் ஆதரவாளரான கலாநிதி கருணாரட்ண பிரிக்கப் போகிறார். இந்தியாவால் ஒன்றை மட்டும் செய்ய முடிந்தது: மலையகத் தமிழர்களை ராஜபக்சேயிற்குஆதரவாக்கியது.

தமிழ்நெற் இந்தியாவை எதிர்க்கிறது.
தமிழ்நெற்றின்(www.tamilnet.com) ஆசிரிய பீடம் இன்று வெளியிட்ட கருத்து இந்தியாவின் கட்டளைக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் களத்தில் இறங்கக் கூடாது என்று பொருள்பட இருக்கிறது. அது மட்டுமல்ல கலாநிதி விக்கிரமரட்ணவிற்கு வாக்களித்து மற்றவர்கள் முகத்தில் அடிக்கவும் கூறப் பட்டுள்ளது தமிழ்நெற்றின் கருத்தில். கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தவர். இதனால் சிங்களவரான இவரை பிரபாகரனின் சித்தப்பா என்று சிங்கள ஊடகங்கள் வர்ணித்தன.

மீண்டும் இந்தியா ஏமாறும்
தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்றாலும் அவர் இந்திய விரோதியாகவே செயற்படுவார். தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் ஏற்கனவே மஹிந்தவின் வெற்றிக்காக யாகங்கள ஆரம்பித்து விட்டனவாம்.

Wednesday 2 December 2009

விடுதலைப் புலிகளின் மூன்று கப்பல்களை இலங்கை கைப்பற்றியுள்ளதாம்.


விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான மூன்று கப்பல்களை இலங்கை கைப்பற்றியுள்ளதாக கொழும்பில் இருந்து வரும் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. அம்மூன்று கப்பல்களும் கொழும்புக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாம். இது விடுதலைப் புலிகளுக்கு விழுந்த மூன்றாவது பெரிய அடி என்றும் அச்செய்தி தெரிவிக்கின்றது. முதலாவது வன்னியில் புலிகளின் தலைமையை வீழ்த்தியமை(?), இரண்டாவது பத்மநாதனைக் கைப்பற்றியமை என்றும் கப்பல்களைக் கைப்பற்றியமை மூன்றாவது என்றும் தெரிவிக்கப் படுகிறது.

இப்போது இலங்கையின் குடியரசுத் தலைவர் தேர்தல் சூடி பிடிக்கத் தொடங்க மஹிந்தவிற்கு இப்படியான செய்திகள் அவசியம் தேவை. இந்தத் தேவையை நிறைவேற்ற இப்படி ஒன்று செய்யப் பட்டதா? சரத் பொன்சேக்கா இல்லாமலே எம்மால் இவற்றை எல்லாம் செய்ய முடியும் என்று காட்ட இப்படிச் செய்யப் படுகிறதா? மஹிந்தவின் வெற்றி வேண்டி நிற்கும் இலங்கையின் அயல் நாடு ஒன்றும் இதில் சம்பந்தப் பட்டுள்ளதா? இது போன்ற கேள்விகள் இச் செய்தியின் பின்னணியில் எழுகின்றன.

தமிழர்கள் முதுகில் மீண்டும் சவாரி செய்யும் இந்தியா.


இலங்கையில் ஒரு ஆயுத போராட்டம் முதலில் தொடங்கியிருக்க வேண்டிய இடம் மலையகம். இந்தியாவில் இருந்து ஏமாற்றிக் கொண்டு வரப் பட்டு மிகமோசமான நிலையில் குடியமர்த்தப் பட்டு. மிக மோசமாக சுரண்டப் பட்டு வாக்குரிமை பறிக்கப் பட்டவர்கள் மலையகத் தமிழ் தொழிலாளர்கள். இவர்கள் இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்களுடன் ஒன்றுபடாமல் ஜவகர்லால் நேரு அவர்கள் தடுத்தார். அவர்களைப் பெரும்பான்மை மக்களான சிங்களவர்களுடன் சேர்ந்தியங்குமாறு நேரு கட்டளையிட்டார். அப்போதைய தலைவர் சௌமியமூர்ந்தி தொண்டமானும் அவ்வாறே செய்தார். சிங்களவர்கள் அவர்கள் வாக்குரிமையைப் பறித்தபோது தொண்டமான் நேருவிடம் முறையிட்டார். நேரு அது உள்நாட்டுப் பிரச்சனை தன்னால் தலையிட முடியாது என்று தட்டிக்கழித்தார். இலங்கையில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றியபோது பாக்கிஸ்தான் தனது நாட்டினர் சகலரையும் தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. ஆனால் இந்தியா ஏற்க முடியாது என்று மறுத்தது. இதனால் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆனார்கள்.

மலையகத் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு பிரபல நாடகம் இருந்தது. அதன் பெயர் காலங்கள் அழுவதில்லை. அதில் ஒரு கட்டம். கதாநாயகி உண்டியலில் பணம் சேர்ப்பாள் சிறிது சிறிதாக. வீட்டில் இருந்த குடிகாரன் ஒருவர் அதைத் திருடிக் குடித்து விடுவார். அறிந்த கதாநாயகி அழுது புலம்புவாள். நான் கதிர்காமம் போய் கந்தனைத் தரிசிக்கவும் கடல் பார்க்கவும் என்று சேர்த்த காசைத் திருடி விட்டான் என்று. வீட்டில் இருந்த பெரியவர் சொல்வார் "கடலையே காணாத நம்மை கள்ளத் தோணி என்கிறாங்களே!" என்று. அவர்களைக் கள்ளத் தோணி என்றவர்கள் இன்று உலகெங்கும் கள்ளத் தோணிகளாய் அலைகிறோம்.

தமிழர்களை ஆயுதபாணியாக்கி சிங்களவர்களுடன் சண்டையிட வைத்து பின்னர் சிங்களவர்கள் பக்கம் சேர்ந்து தமிழர்களை அழித்தொழிக்க சகல உதவியும் செய்து தமிழர்களை நிர்க்கதி ஆக்கிய இந்தியா இப்போது மலையத் தமிழர்களின் முதுகில் சவாரி செய்ய முயல்கிறது. மலையகத் தமிழர்கள் பலகாலப் போராட்டங்களுக்குப் பின்னர் வாக்குரிமையைப் பெற்றனர். எழுபதுகளில் வட-கிழக்கு இலங்கையில் ஆயுத போராட்டம் தீவிரமடையும் போது அது மலையகத்திற்கும் பரவாமல் இருக்க அவர்களின் வாக்குரிமையை ஜே ஆர் ஜயவர்த்தனா வழங்கினார். அந்த வாக்குரிமையை மலையகத் தலைவர்கள் தமக்கு மந்திரிப் பதவி பெறுவதற்குப் பயன் படுத்தி வருகின்றனர்.

இப்போது நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மலையக மக்களின் அதிக வாக்கு வங்கியைக் கொண்ட தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி மஹிந்த ராஜபக்சேவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்குவதாக நேற்று அறிவித்தது. நிபந்தனை அற்றவிதத்தில் ஆதரவு வழங்குவதற்கு மஹிந்த அப்படி என்ன தமிழர்களின் நண்பரா? அவர் இதுவரை ஆட்சியில் இருக்கையில் தமிழர்களுக்கு என்ன நன்மை செய்தார்? மலையகப் பாடசாலைகளில் ஆசிரியப் பற்றாக் குறையை, தொழிலாளர்கள் குடியிருப்பின் மேம்பாட்டை, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை... இப்படி ஏதாவதைக் கேட்காமல் ஆதரவு வழங்க அவர்கள் முன் வந்தது ஏன்? ஒரே காரணம் இந்தியாவின் வற்புறுத்தல். மஹிந்த ஏதாவது மலையகத் தொழிலாளர்களுக்கு வழ்ங்குவதாக வாக்குக் கொடுத்தால் அதே காரணத்திற்காக சிங்களவர்கள் அவருக்கு வாக்களிக்காமல் விடலாம். இலங்கையின் இன ஒற்றுமை அப்படி. இதற்காகவே இந்தியா நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கும் படி தோட்டத் தொழிலாளர் காங்கிரசைப் பணித்தது. காங்கிரசும் அப்படியே செய்கிறது. அதாவது சிங்களவனைத் திருப்திப் படுத்த இந்தியா தமிழர் நலன்களைப் மீண்டும் பலியிடுகிறது. கோபாலபுரத்தார் இப்போதும் ரணிலுக்கு வாக்களிக்கச் சொல்லுவாரா? அவருக்கு ஏற்கனவே அவசரப் பட்டு டெல்லி மேலிடம் ஒரு கட்டளையை வழங்கி விட்டது.

Tuesday 1 December 2009

சீனாவின் எச்சத்தை ருசிக்க இந்தியா தயாராகிறது.


1974-ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தைத் திறக்க அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் யாழ்ப்பாணம் சென்றபோது நமது அண்டை நாட்டுப் பிரதமர் வருகிறார் என்று தமிழரசுக் கட்சியின் பத்திரிகையான சுதந்திரன் பத்திரிகை எழுதியதாம். தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கை ஒரு நாடு அல்ல. ஒரு நாடாக ஐரோப்பியரால் இணைக்கப் பட்டுப் பின் சிங்களவரிடம் கையளிக்கப் பட்டநாடு.

சம்பந்தம் இல்லாமல் சம்பந்தன் ஐயா
இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் சார்பில் போட்டியிடக் கூடிய தகுதியான வேட்பாளர் இரா. சம்பந்தன் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் அச்செய்தியில் தெரிவிப்பது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்களுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்? இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தல் இலங்கையின் அரசியல் யாப்புக்கு அமைய நடை பெறுகிறது. இலங்கையின் அரசியல் யாப்பு தமிழர்களுக்கு உரிமையை மறுப்பது. இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் இதில் தன்னை சம்பந்தர் ஐயா மூலம் சம்பந்தப் படுத்துகிறது?


இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சே அல்லது சரத் பொன்சேக்கா ஆகிய இருவரில் ஒருவர்தான் வெற்றி பெறமுடியும். இருவருமே தமிழின விரோதிகள். சம்பந்தன் ஐயா போட்டியிட்டு வெல்லப் போவது இல்லை. இருவரில் ஒருவரைக் கூட தமிழர் தெரிவு செய்து வாக்களிக்க முடியாது. அந்த இரு வேட்பாளர்களும் பல வாக்குறுதிகளை தமிழர்களுக்கு வழங்கலாம் ஆனால் அவை நிறைவேற்றப் படப் போவதில்லை என்பதை யாவரும் அறிவர்.


இந்தியாவில் இருந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு மஹிந்த ராஜபக்சேயிற்கு வாக்களிக்கும் படி திரை மறைவில் அழுத்தங்கள் கொடுக்கப்படப் போகிறது அல்லது ஏற்கனவே கொடுக்கப் பட்டு விட்டது. இதைத் தவிர்க்கத்தான் தமிழ்தேசியக் கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்ததா? ஏற்கனவே மலையக் கட்சிகள் இந்தியாவின் உத்தரவிற்குப் பணிந்து மஹிந்த ராஜபக்சேயை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டன. மஹிந்த மலையகத் தலைவர்களுக்கு பதவிகள் வழங்கியதைத் தவிர மலையகத் தமிழர்களுக்கு எதுவும் செய்த்துமில்லை செய்யப் போவதுமில்லை.

இருவருக்கிடையில் மும்முனைப் போட்டி
இந்தியா தனக்கு சார்பான ஒருவர் குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்பதற்காக மஹிந்தவை ஆதரிக்கிறது. இலங்கையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு போட்டி நடக்கிறது. சீனா திரை மறைவில் மஹிந்தவையும் சரத்தையும் ஆதரிக்கிறது. சீனா எப்போதும் இதையே செய்யும் இலங்கையில் யார் போட்டியிட்டாலும் யார் ஆட்சி செய்தாலும் சிங்களவர்களின் சிறந்த நண்பனாக சினாதிகழும். இந்தியா சீனா அமெரிக்கா ஆகிய நாடுகளிற்கு இடையிலான இந்த மும்முனைப் போட்டியில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? அமெரிக்காவிற்கு எதிரான அணியில் இந்தியா நிற்கிறது. மஹிந்தவும் அவரைச் சூழ்ந்தவர்களூம் தீவிர சீன ஆதரவாளர்கள் என்று அறிந்தும் மஹிந்தவிற்கு இந்தியா ஆதரவு கொடுப்பஹ்டு ஏன்? இந்தியாவின் நிலைப்பாடு சீனாவிற்கு மஹிந்த கொடுத்துபோக சீனாவின் எச்சத்தை ருசிக்க இந்தியா தயாராகிறது.

Monday 30 November 2009

பிரித்தானிய அரசியல்வாதிகளின் "நன்றி வணக்கம்" தமிழர் பிரச்சனைக்குத் தீர்வாகுமா?


பிரித்தானியாவில் நடக்கும் தமிழர்களின் நிகழ்ச்சிகளில் பாராளமன்ற அரசியல்வாதிகளினதும் உள்ளூராட்சிச் சபைகளின் அரசியல்வாதிகளின் பங்கு பற்றல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவர்கள் தமிழில் "வனக்கம்" என்று சொல்லித் தமது உரைகளை ஆரம்பித்து "நன்ரி" என்று சொல்லி முடித்துக் கொள்வார்கள். இப்போது ஒருவர் சகோதர சகோதரிகலே என்று சொல்லுமளவிற்கு முன்னேறி இருக்கிறார். அவர்களின் உரைகள் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும். . தமிழர் நிகழ்வுகளில் பிரித்தானிய அரசியல்வாதிகளின் அதிகரித்த பங்குபற்றலுக்கு இந்த ஆண்டில் பிரித்தானியாவில் நடை பெற்ற ஊர்வலங்களில் இலட்சக் கணக்கில் மக்கள் திரண்டமையும் வரவிருக்கும் நாடாள மன்றத் தேர்தலும்தான் காரணம். இந்தப் பங்குபற்றல்கள் எல்லாம் பங்களிப்புக்கள் அல்ல. பிரித்தானிய அரசு செயலில் இதுவரை இலங்கைத்தமிழர்கள் பிரச்சனைக்கு என்ன பங்களிப்புச் செய்தது என்று பார்த்தால் எதுவுமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடக்கவிடாமல் தடுத்தமையை தமிழர் பிரச்சனைக்கான தீர்விற்கு என்ன பங்களிப்புச் செய்யப் போகிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி வழங்குவதை தடுப்பீர்களா என்று பிரித்தானியப் பிரதிநிதியிடம் கேட்டபோது அதற்கும் தமிழர் பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை என்று பிரத்தானியப் பிரதிநிதி பதிலளித்தார். சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கைக்கான கடனுதவி வாக்கெடுப்புக்கு வந்தபோது பிரித்தானியப் பிரதிநிதி எதிர்த்து வாக்களிக்க வில்லை. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட்டார். இலங்கைக்கு பிரித்தானியா இரகசியமாக ஆயுத விற்பனையும் செய்தது.

வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தில் ஒரு படை நடவடிக்கைக்கு பிரான்ஸ் பிரித்தானியாவை அழைத்தபோது இந்தியாவின் எதிர்ப்புக்குப் பயந்து பிரித்தானியா பின்வாங்கியது.

பிரித்தானிய இந்திய அரசியல்வாதிகள்.
வட இந்தியர்கள் வரிந்து கட்டிக்கொண்டு தமிழின ஒழிப்புக்கு சகல உதவிகளையும் செய்யும் போது பிரித்தானியாவில் உள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சர்மாக்களும் சிங்குகளும் பிரித்தானியத் தமிழர்களின் வாக்குகளுக்காக தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். இவர்களில் சிலர் ஈழப் பிரச்சனையில் உண்மையான கரிசனை கொண்டவர்கள் என்பதை மறுக்க முடியாது.

அரசியல்வாதிகளின் கருத்தும் அரசின் நிலைப்பாடும் ஏன் முரண்படுகின்றது?
மேற்குலக நாடுகளில் முதலாளித்துவ வர்க்கம் தனது நலன்களைப் பேணுவதற்காக கட்சிகளை ஆட்சியில் அமர்த்தும். ஆட்சியில் அமர்பவர் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் பொது நலனையோ சுயநலனையோ கருத்தில் கொண்டு செயற்படுவார்களானால் அவர்கள் கொல்லப் படலாம். உதாரணம்: ஜோன் F கெனடி. பின்னாளில் இது பாதகமான் விளைவுகளை தமது வர்க்கத்திற்கு ஏற்படுத்தலாம் என்றுணர்ந்த முதலாளித்துவ வர்க்கம் தனது பாணியை முற்றாக மாற்றிக் கொண்டது. இப்போது முதலாளித்துவ வர்க்கம் தனது நலனுக்கு சார்பாக நடக்காத அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த தவறுகளை அம்பலப் படுத்து அவர்களை மிரட்டிப் பணிய வைக்கிறது. உதாரணம்: பில் கிளிண்டன். இப்போது அரசியல்வாதிகள் வாக்குச் சேர்பதற்காக மக்கள் முன்வைக்கும் கருத்துக்களும் ஆட்சிக்கு வந்தபின் அவர்கள் நடக்கும் விதமும் வேறு. தேர்தலுக்கு முன் பராக் ஒபாமா தன்னை ஒரு இந்திய நண்பராகக் காட்டிக் கொண்டார். அமரிக்காவில் உள்ள இந்தியர்களின் வாக்குக்களை பெற அவர் இப்படிச் செய்தார். ஆனால் இப்போது அமெரிக்க அரசின் கொள்கை அவரது ஆட்சியில் மாறவில்லை. அமெரிக்காவின் கொள்கையான சீனாவைப் பகைக்காதே என்பதில் அவரால் எந்ததமாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

ரீகன் - தட்சர்
அமெரிக்காவில் ரொணால்ட் ரீகனும் பிரித்தானியாவில் மார்கரட் தட்சரும் ஆட்சியில் இருக்கையில் மேற்குலக நாடுகள் ஒரு முக்கிய நிலைப் பாட்டை எடுத்தன. அதாவது எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிதிக் கொள்கையையும் வெளியுறவுக் கொள்கையிலும் முடிபுகளை எடுப்பவர்கள் அந்தத் துறைகளின் பணிபுரியும் நிபுணர்களே அன்றி அரசியல்வாதிகள் அல்ல. இது நிலையான கொள்கைக்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டது. இவ்விரண்டு கொள்கைகளும் உலக மயமாக்குதலுக்கும் உலகளாவிய ரீதியில் மேற்குலகின் ஆதிக்கத்தைப் பேணுவதற்கும் பெரும் பங்காற்றியது.

பிரித்தானிய அரசியல்வாதிகள் என்னதான் தமிழர்கள் முந்தோன்றி பேசினாலும் அரசின் நடவடிக்கைகள் அவர்களது உலகமயமாக்கல் கொள்கையையும் உலக ஆதிக்கக் கொள்கையையும் பாதுகாப்பதில் இருந்து விலகாது. இலங்கையில் ஒரு உலகமயமாக்கலுக்கு ஆதரவான அரசை ஆதரிப்பதில் அவர்கள் பின்வாங்க மாட்டார்கள். இலங்கை சீன சார்பாகக்ப் போவதைத் தடுக்கத்தான் அவர்கள் முயல்வார்கள். போர்குற்றம் புரிந்த சரத் பொன்சேக்காவை அமெரிக்கா ஆதரிப்பது இதற்க்காகக்த்தான்.

Sunday 29 November 2009

திசை தெரியாமல் தவிக்கும் தமிழ் அரசியல் கட்சிகள்


தமிழ் மக்கள் இலங்கையில் இனக் கொலை செய்து போர்க் குற்றங்கள் புரிந்தவர்களாக சரத் பொன்சேக்காவையும் மஹிந்த ராஜபக்சேயையும் கருதுகிறார்கள். சரத் பொன்சேக்கா ரணில் விக்கிரமசிங்கேயுடன் இணைந்துள்ளார். தமிழத் தேசியத்தின் எதிரிகளும் துரோகிகளும் சென்ற இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழ்மக்கள் வாக்களிக்காமல் புறக்கணித்ததால்தான் இலங்கையில் தமிழர்களுக்கு இந்த அளவு பிரச்சனையும் என்று சொல்வதில் மகிழ்கிறார்கள். ஆனால் இன்று ரணில் யாருடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்? இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த வித உரிமையும் கிடையாது அவர்கள் இங்கு வாழலாம் என்று "பெருந்தன்மையுடன்" கூறிய சரத் பொன்சேக்காவுடன். சரணடைய வந்தவர்களைச் சுட்டுக் கொன்றேன் என்று கூறிப் பெருமை தேடிக் கொண்டவருடன்.

இலங்கையில் நடக்க விருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் சரத் பொன்சேக்கா அல்லது மஹிந்த ராஜபக்சே இருவரில் ஒருவர்தான் வெல்லப் போகிறார்கள். இவர்கள் இருவருமே தமிழின விரோதிகள். யார் வென்றாலும் தமிழர்களுக்கு விமோசனம் இல்லை. மேலும் துன்பம் தான் தருவார்கள். இவர்களில் யாரைத் தமிழர் ஆதரித்தாலும் சிலகாலம் கழித்து தமிழ்த் துரோகிகளும் விரோதிகளும் இவரை ஆதரிக்காமல் அவரை ஆதரித்திருந்தால் நன்மையடந்திருப்பீர்கள் என்றுதான் சொல்லப் போகிறார்கள்

தமிழர்களை ஒன்று திரட்டி ஒரு வாக்குப் பலத்தை தன்பின்னால் எடுக்க முயன்ற இந்தியா தோல்வியடைந்து விட்டது. தமிழர்களின் ஆயுத பலத்தை முறியடிக்க சிங்களவர்களுக்கு சகல உதவிகளையும் செய்த இந்தியாவிற்கு இலங்கைத் தமிழர்களை ஓரணியில் திரட்டும் அருகதையோ யோக்கியதையோ கிடையாது. அது தன் சுயநலத்திற்காகவே இதைச் செய்கிறது. குறைந்த பட்சம் மலையகத்தில் வாழும் தமிழரக்ளையே இந்தியாவால் ஓரணியின் கீழ் திரட்ட முடியவில்லை. தோட்டத் தொழிலாளர் காங்கிரசும் மலைய மக்கள் முன்னணியும் வேறு வேறு அணியில்! இது இந்தியாவிற்கு தமிழர்களை ஓரணியில் திரட்டும் திறமை இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.

மஹிந்தவை ஆதரிக்க மறுக்கும் பிள்ளையான்.
இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிள்ளையான் தன்னால் மஹிந்த ராஜபக்சேயை ஆதரிக்க முடியாது என்று அறிவித்துள்ளார். தனது 18 மாத ஆட்சிக்காலத்தில் தன்னை எந்த அபிவிருத்தித் திட்டங்களையோ அல்லது வேலை வாய்ப்புக்களையோ தனது மக்களுக்காக செய்ய மஹிந்த ஆட்சி அனுமதிக்காததால் தன்னால் மக்களை மஹிந்த ஆதரியுங்கள் என்று சொல்ல எந்த சாதானைகளையோ வெற்றிகளையோ முன்வைக்க முடியாமல் இருக்கிறது என்றாராம் பிள்ளையான். இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தம் மூலம் பதவி ஏற்ற பிள்ளையானுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அரசியல் அறிவிலியான ராஜீவ் காந்தியால் தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் தரும் என்று சொல்லப் பட்டது இந்தப் 13வது திருத்தம். கிழக்கிலங்கையை தனது பிடியில் கொண்டுவரவும் விடுதலைப் புலிகளைப் பலவீனப் படுத்தவும் கருணாவை விடுதலைப் புலிகளிடமிருந்து பிரித்தது இந்தியா. கிழக்கிலங்கையில் இந்தியா ஆதிக்கத்தை விரும்பாத அமெரிக்கா பிள்ளையான கருணாவிடமிருந்து பிரித்தெடுத்து கருணாவை நாட்டை விட்டே ஓடச் செய்தது. கருணா பின் ராஜபக்சேக்களின் தீவிர ஆதரவாளராக மாறி இலங்கை வந்தார். அமெரிக்க ஆதரவு வேட்பாளரையே பிள்ளையான் ஆதரிப்பார். சந்தர்ப்பவாதிகள் என்றும் மாறலாம். நாளை பிள்ளையான் தனது கருத்தை மாற்றலாம்.

செய்வதறியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழர் முன் வைக்கக்கூடிய ஒரே திட்டம் இப்போது அதிகாரப் பரவலாக்கம் என்தே. ஆனால் அதிகாரப் பரவலாக்கம் என்பது சிங்களவர்களைப் பொறுத்தவரை ஒரு ரெம்ப ரெம்ப கெட்ட வார்த்தை. இதை எந்த குடியரசுத் தலைவர் வேட்பாளரும் முன் வைக்கமாட்டார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள ரெலோ இயக்கப் பிரிவினர் இந்தியா சொல்பவர்களுக்கு ஆதரவு அளிக்கத் துடிக்கின்றனர். செய்வதறியாத வேறு சிலர் தாமே குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில் ஒருவரை இறக்கினால் என்ன என்பதை யோசிகின்றனர்.

தமிழ் அரசியல் வாதிகள் சிலவற்றை மறந்து விட்டனர்:
  • தமிழர்களின் அதி தீவிர விரோதி யாரோ அவருக்குத்தான் சிங்களமக்கள் விரும்புவாரகள்.
  • இத் தேர்தலில் தமிழர்கள் வாக்குப் பலத்தை கருத்தில் கொள்ளாது பிரதம வேட்பாளர்கள் களத்தில் இறங்குவதையே சிங்களப் பேரினவாதிகள் விரும்புகிறார்கள்.
  • தேர்தல்களில் வாக்களிப்பதால் தமிழர்களுக்கு எதுவும் நடக்கப் போவதில்லை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...