Monday 13 March 2017

இந்தியாவும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களும்



ஐக்கிய அமெரிக்கா தனது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35 ஐ மூன்று வடிவங்களில் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. அதனது B-21 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களின் உற்பத்தி இறுதி நிலையில் இருக்கின்றது. B-21 போர்விமானங்கள் அமெரிக்காவில் இருந்து கிளம்பி உலகின் எப்பகுதியிலும் குண்டுகளை வீசிவிட்டு மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பக் கூடிய அளவிற்கு தொலைதூரப் பறப்பை நாற்பதினாயிரம் இறாத்தல் எடையுள்ள குண்டுகளுடன் செய்யக் கூடியது. சீனா தனது J-20 போர் விமானங்கள் ஐந்தாம் தலைமுறையைச் சார்ந்தது என்று சொல்கின்றது. அவற்றை வாங்க பாக்கிஸ்த்தான் பெரு முயற்ச்சி செய்கின்றது. இதனால் இந்தியாவிற்கு ஒரு ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப் படுகின்றது.

இரசிய இந்திய ஒத்துழைப்பு
இந்திய இரசிய கூட்டுத் தயாரிப்பான ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் 2010-ம் ஆண்டில் இருந்து ஓர் இழுபறி நிலையில் இருந்தது. இரசியா உயர் தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளத் தயங்குவதாகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு அபிவிருத்தி அடைந்து செல்வதும் அதற்கான காரணமாக முன்வைக்கப்பட்டது. ஆனால் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தியில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு அதை உலகின் முதற்தர ஏவுகணையாக உருவாக்கியது இரு நாடுகளுக்கும் இடையிலான படைத்துறை உற்பத்தியின் அவசியத்தை இருதரப்பினருக்கும் உணர்த்தியுள்ளது.

பலதரப்பட்ட ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள்
அமெரிக்க ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35 C ஓர் உலங்கு வானூர்தி போல் ஓடுபாதை இன்றி செங்குத்தாகக் கிளம்பிப் பறக்கவும் தரையிறங்கவும் முடியுமானதாகும். அமெரிக்காவின் F-35, B-21 ஆகியவை ஈடு இணையற்ற போர்விமானங்களாகும். சீனாவின் அடுத்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான FC-31 Gyrfalcon தனது பரீட்சார்த்தப் பறப்பை 2016-ம் ஆண்டின் இறுதியில் செய்திருந்தது.  2017-ம் ஆண்டு சூழ்நிலையில் இந்தியா பிரான்ஸிடமிருந்து வாங்கிக் கொண்டிருக்கும் ரஃபேல் போர் விமானங்களால் சீனாவிடமிருக்கும் இரசியத் தயாரிப்பு Su-27, Su-35,  உள்நாட்டுத் தயாரிப்புக்களான J-11 and J-15 ஆகிய போர் விமானங்களைச் சமாளிக்க முடியும். ஆனால் J-20ஐயும் FC-31 Gyrfalcon ஐயும் சமாளிக்க இந்தியா துரிதமாகச் செயற்பட வேண்டும்.

ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களின் முக்கிய அம்சங்கள்:
1. எல்லா வகையிலும் எதிரிக்கு புலப்படாமை
2. எதிரியால் இடைமறிக்கப்பட முடியாமை
3. உயர் செயற்பாடுடைய விமானக் கட்டமைப்பு (high-performance airframes)
4.  மேம்படுத்தப்பட்ட இலத்திரனியல் பறப்பு அம்சங்கள் (advanced avionics features)
5. சிறந்த வலையமைப்புத் தொடர்பாடல் கொண்ட ஒன்றிணைக்கப்பட்ட கணனித் தொகுதி (highly integrated computer systems capable of networking with other elements within the battlespace for situation awareness).

புலப்படாத்தன்மையை சமாளித்தல்
ரடார்களில் இருந்து வானொலி அலைகளை வீசி அது பட்டுத் தெறித்து வரும் வானொலி அலைகளைக் கொண்டு எதிரியின் இலக்குகளை அறிவதே கதுவி அல்லது ரடார் தொழில்நுட்பம். இதை இரண்டு வகையில் சமாளித்து புலப்படாத்தன்மை அமெரிக்காவால் முதலில் உருவாக்கப்பட்டது. முதலாவது வானொலி அலைகளை உறிஞ்சக் கூடிய பூச்சை விமானத்திற்கு பூசுதல். இரண்டாவது விமானத்தின் வடிவமும் மேற்பரப்பும் அதில் படும் வானொலி அலைகளை தெறிக்கச் செய்யாமல் திசைதிருப்பக் கூடிய வகையில் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்து வரும் வெப்ப அலைகளை உணர்ந்து  அவற்றை இனம் காணுதல். அமெரிக்காவின் Northrop Grumman நிறுவனம் வெப்ப அலைகளை அதிக அளவில் வெளிவிடாத விமான இயந்திரங்களை உருவாக்கியது. முதலில் புலப்படாத்தன்மை கொண்ட F-117 விமானத்தை லொக்கீட் மார்டின் நிறுவனம் உருவாக்கியிருந்தது. இருந்தும் அமெரிக்காவின் B-21 விமான உற்பத்தியை அமெரிக்கப் பாதுகாப்புத்துறை வெப்ப அலை முகாமைத்துவத் தொழில்நுட்பத்தை உருவாக்கிய Northrop Grumman நிறுவனத்திடம் கையளித்தது. ஏற்கனவே B-52, B-2 ஆகிய போர்விமானங்கள் மூலம் பெயர்பெற்ற Northrop Grumman நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான B-21 லொக்கீட் மார்ட்டீனின் F-35இலும் பார்க்க பல வகைகளில் சிறந்ததாக அமையும். அது பல வல்லரசு நாடுகளின் வான் பாதுக்காப்பை நிர்மூலமாக்கும்.


இரசியாவின் இயந்திரப் பிரச்சனைகள்
இரசியா தனியாக ஒரு ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான Sukhoi T 50ஐ உருவாக்குவதாகவும் இந்தியாவுடன் இணைந்து வேறு ஒரு வகை ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்குவதாககும் இரசியா முடிவு செய்தது. இருந்தும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்திற்கான இயந்திரத்தை உருவாக்குவதில் பின்னர் தாமதம் ஏற்பட்டது. மேற்கு நாடுகளில் இருந்து இயந்திரம் வாங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. ஆனால் எந்த ஒரு மேற்கு நாடும் தமது ஐந்தாம் தலைமுறைப் போர் விமான இயந்திரம் இரசியாவின் கைகளுக்குப் போவதை விரும்பவில்லை. அமெரிக்கா தனது நெருங்கிய நட்பு நாடான ஜப்பானுக்கே F-22 போர் விமானங்களை விற்பனை செய்வதை அமெரிக்கப் பாராளமன்றம் தடுத்தது. இரசியாவின் தயக்கம் ஆரம்பத்தில் இரசியா தனது ஐந்தாம் தலைமுறைப் போர் விமான இயந்திரத் தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் நிலையில் இல்லையா என்ற ஐயத்தை உருவாக்கியது. ஆனால் ஒரு முழுமையான ஐந்தாம் தலைமுறைப் போர் விமான இயந்திரத்தை உருவாக்கும் தொழில்நுட்பமும் நிதியும் இரசியாவிடம் தட்டுப்பாடாக இருந்தது.

உடன்பாடுகளில் முரண்பாடுகள்
இரசியாவும் இந்தியாவும் எத்தனை விமானங்களை வாங்குவது, யார் எந்தப் பணியைச் செய்வது, விமானத்தின் புலப்படாத் தன்மை, இயந்திரத் தொழில்நுட்பம் தொடர்பாக இரசியாவும் இந்தியாவும் ஓர் உடன்பாட்டிற்கு வருவது கடினமாக இருந்தது. இரசியாவின் திட்டத்தில் இந்தியா 43 மாற்றங்களைச் செய்தது. இரசியாவின் எஸ்யூ-35 போர் விமானங்கள் வெற்றிகரமாக உற்பத்தி செய்து முடித்த பின்னர் இரசியா தான் வாங்க இருந்த இந்தக் கூட்டுத் தயாரிப்பு விமானங்களின் எண்ணிக்கையைக் குறைத்தது. இரசியா 250 விமானங்களும் இந்தியா 144 விமானங்களும் வாங்குவதாக முதலில் ஒத்துக் கொள்ளப்பட்டது.  உற்பத்தி செய்யப்படும் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்தால் விமானம் ஒன்றின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் என்பதால் தான் திட்டத்தில் இருந்து விலகுவதாக இந்தியா அறிவித்தது. 2015 டிசம்பரில் இரசியாவில் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனைச் சந்தித்த போது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் தொடர்பான ஒரு சரியான உடன்பாட்டை எட்ட முடியாமல் போனது. பின்னர் இரசியா சில விட்டுக் கொடுப்புகளைச் செய்தது.
2016 செப்டம்பரில் இரசியாவும் இந்தியாவும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உருவாக்குவது தொடர்பாக ஒரு உடன்பாட்டிற்கு வந்தன.

சீனாவின் ஐந்தாம் ( தறு)தலைமுறை
சீனா தனது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான J-31 திட்டத்தை மீண்டும் மேம்படுத்தியுள்ளது புதிய விமானத்திற்கு FC-31 Gyrfalcon என சீனா பெயர் சூட்டியுள்ளது. அதன் பரீட்சார்த்தப் பறப்பு 2016 டிசம்பர் இறுதியில் நடந்தது. இரட்டை இயந்திரங்கள், ரடார்களுக்கு புலப்படாத்தன்மை ஆகிய இரண்டும் சீனாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும். அது எட்டு தொன் எடையுள்ள படைக்கலன்களைத் தாங்கிச் செல்லக் கூடியது. ஒரு FC-31 Gyrfalconஇன் உற்பத்திச் செலவு 70மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் விமான இயந்திர உற்பத்தித் திறன் சிறப்பானது அல்ல. இதுவரை காலமும் அது விமான இயந்திரங்களை இரசியாவிடமிருந்தே வாங்கி வந்தது. சீனா அமெரிக்காவின் விமான உற்பத்தி நிறுவனங்களின் கணினித் தொகுதிகளை ஊடுருவி திருடிய தொழில்நுட்பத்தகவல்களை வைத்தே தனது J-20 விமானத்தை உருவாக்கியதாக அமெரிக்கர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சீனாவின் J-20 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் அல்லவென வாதிடுவோரும் உண்டு. சீனாவின் J-20 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் என்றால் அது ஏன் இரசியாவின் நான்காம் தலைமுறைப் போர்விமானமான எஸ்யூ-35 போர்விமானங்களை பெருமளவில் வாங்க வேண்டும் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சீனா J-20ஐக் காட்சிப் படுத்திய போது

இரசியாவின் T-50 (PAK FA)
இரசியா தான் தனித்து தயாரிக்கும் T-50 (PAK FA) போர் விமானங்கள் 2018-ம் ஆண்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2018-ம் ஆண்டு 250 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்து முடிக்கவிருக்கின்றது.  இவை பற்பணி, ஒற்றை இருக்கை, இரட்டை இயந்திர வான் ஆதிக்கம் செலுத்தக் கூடியதும், ஆழ்வான் உதவிவழங்கக் கூடியதுமான போர் விமானம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2016-ம் ஆண்டு பல பரீட்சார்த்த பறப்புக்கள் மேற்கொண்ட போதிலும் இயந்திரம் இப்போதும் பிரச்சனைக்கு உரியதாகவே இருக்கின்றது. இதே வேளை இரசியா ஐக்கிய அமீரகத்துடன் இணைந்து தனது மிக்-29 போர்விமானங்களை அடிப்படையாக வைத்து ஓர் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கவிருக்கின்றது.

இந்தியா தனியாக 5-ம் தலைமுறைப்போர்விமானத்தை உருவாக்குமா?
இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான தேஜஸ் போர்விமானத்தின் வெற்றியை தொடர்ந்து தாம் தனியாக ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கலாம் என இந்திய நிபுணர்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. அதேவேளை இரசியாவுடன் இணைந்து தயாரிக்கும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் சீனாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களிலும் பார்க்க சிறந்தவையாக அமையும். விமான உற்பத்தித் துறையில் சீனாவிலும் பார்க்க இரசியா பலவழிகளில் முன்னணியில் திகழ்கின்றது. இரு நாடுகளும் இணைந்து தயாரிக்கும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் அமெரிக்காவின் F-35ஐப் போல் தொடர்பாடலிலும் புலப்படாத்தன்மையிலும் சிறந்து விளங்குமா? F-35ஐப் போல் வேவுபார்த்தல், காண்காணிப்பு, எதிரிநிலைகள் தொடர்பாக தகவல் திரட்டல், எதிரியின் தொடர்பாடல்களைக் குழப்புதல் போன்ற பற்பணிகளைச் செய்யக் கூடியதா? F-35ஐப் போல் எதிரியின் விமானம் தன்னை அடையாளம் காண முன்னர் எதிரியின் விமானங்களை இனம் கண்டு அழிக்குமா? F-35-C ஐப் போல் செங்குத்தாக எழும்புமா? அமெரிக்காவின் B-21ஐப் போல் உலகின் எப்பகுதிக்கும் சென்று குண்டுகளை வீசிவிட்டுத் தளம் திரும்புமா? இரசிய இந்தியக் கூட்டுத் தயாரிப்பு களத்தில் செயற்படத் தொடங்கும் போது அமெரிக்காவின் நெடிப் பொழுதில் லேசர் கதிர் மற்றும் மைக்குறோவேவ் கதிர் படைக்கலன்களைக் கொண்ட ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் களத்திற்கு வந்து ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை செல்லாக்காசு ஆக்கி விடுமா? போன்ற பல கேள்விகளுக்கு இரசிய இந்திய கூட்டுத் தொழில்நுட்பம் பதில் சொல்ல வேண்டும்.

இந்தியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களையிட்டு சீனாவிலும் பார்க்க பாக்கிஸ்த்தானே அதிக கரிசனை கொண்டுள்ளது. சீனாவிற்குப் போட்டியாக இந்தியா உருவாக்கும் படைக்கலன்களுக்குப் போட்டியாக பாக்கிஸ்த்தான் படைக்கலன்களை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்த நிலையில் உள்ளது. அண்மைக் காலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான படைத்துறை சமநிலை பாக்கிஸ்த்தானுக்குச் சாதகமாக மாறிக் கொண்டு இருக்கின்றது. இழுபட்டுக் கொண்டு போன இரசிய இந்திய கூட்டுத் தயாரிப்பு ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் தொடர்பான ஒப்பந்தம் 2017 பெப்ரவரி மாதத்தில் உடன்பாடு இறுதியாக எட்டப்பட்டுள்ளது. சீனா தனது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான J-31ஐ உருவாக்க முன்னர் இந்தியா தன்வசம் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை வைத்திருக்குமா என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போமாக.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...