Monday 25 September 2017

புவிசார் கேந்திரோபாயங்களுக்காக மியன்மாரில் பலியிடப்படும் ரொஹிங்கியர்கள்

ஒரு பிராந்தியத்தில் உள்ள அரசுகள், இனங்கள், பெருவர்த்தக நிறுவனங்கள், அங்கு ஆதிக்கம் செலுத்த முனையும் வெளிநாட்டு அரசுகள்  ஆகியவற்றிடையே அப்பிராந்தியம் தொடர்பான உறவுகள், போட்டிகள், முரண்பாடுகள் புவிசார் அரசியல் எனச் சொல்லலாம். இந்தப் போட்டிகளில் அப்பிராந்தியத்தில் உள்ள வளங்களும் பிராந்தியத்தின் பூகோள முக்கியத்துவமும் முக்கிய பங்குகளை வகிக்கும். இந்தப் போட்டிக்காகவும் உறவுகளுக்காகவும் அப்போட்டியில் சம்பந்தப்பட்டவர்கள் செய்யும் நகர்வுகள் மற்றும் திட்டங்கள் புவிசார்-கேந்திரோபாயம் எனப்படும். 


கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மியன்மார்.
பர்மா என முன்னர் அழைக்கப்பட்ட மியன்மார் ஐந்து கோடியே இரண்டு இலட்சம் (52 மில்லியன்) மக்களைக் கொண்டது. கனிம வளம் மிக்க மியன்மார் சீனா, இந்தியா, பங்களாதேசம், லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டது. இந்து மாக்கடலின் வங்காள விரிகுடாவை மேற்கு எல்லைகளாகக் கொண்டது. உலகிலேயே அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மியன்மார் இருக்கின்றது. இதனால் இந்த இரண்டு நாடுகளின் எல்லை தாண்டிய ஆதிக்கப் போட்டியில் மியன்மார் அகப்பட்டுள்ளது. மியன்மாரின் காடுகளும் மலைகளும் ஆறுகளும் சீனாவின் கிழக்கு எல்லைக்கு கவசமாக அமைந்துள்ளன. சீனாவின் முத்துமாலைத் திட்டத்தின் முதல் முத்தாக இருப்பது மியன்மார் சிட்வே துறைமுகம்தான். அது இருப்பது ரொஹிங்கியர்கள் வாழும் ரக்கைன் மாகாணத்தில். மியன்மாரை சீனாவின் பிடியில் இருந்து பறிப்பதில் அமெரிக்கா வெற்றி கண்டு வருகையில் அமெரிக்காவின் மியன்மார் முதலீடான ஆங் சான் சூ கீயின் பெறுமதி குறைவடையாமல் இருக்க வேண்டும் என்றால் பெரும்பான்மை பௌத்தர்களின் ஆதரவை சூ கீ அம்மையார் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அதனால் அவர் புத்த தர்மத்தைப் புறந்தள்ளி விட்டு வாக்கு வேட்டை அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார். சீனாவின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் பெரும் சவாலாக உள்ள இடம் மலாக்கா நீரிணையாகும். அது உலகின் கடற்போக்குவரத்தின் பிரச்சனைக்குரிய திருகுப் புள்ளிகளில் ஒன்றாகும். அதில் வைத்து சீனாவிற்குச் செல்லும் கப்பல்களையும் சீனாவிலிருந்து செல்லும் கப்பல்களையும் சீனாவின் எதிரிகளால் தடுக்க முடியும்.


போட்டிக்களமாக மியன்மார்.
இந்தியாவைச் சுற்றிவர உள்ள நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் வளர்வது இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்திற்கும் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கும் பெரும் சவாலாக அமைகின்றது. சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராகச் செயற்படக் கூடிய ஆவலும் விருப்பமும் வல்லமையும் இந்தியாவிலும் பார்க்க அமெரிக்காவிற்கு அதிகம் உள்ளது. இந்தியாவின் நட்பு நாடுகளின் பட்டியலில் தற்போது உச்சத்தில் இருப்பவை ஜப்பான், இஸ்ரேல், இரசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளாகும். சீனாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக இந்தியாவுடன் கைகோர்த்துக் கொள்வதை ஜப்பான் விரும்புகின்றது. மியன்மாரில் சீன ஆதிக்கத்தை இல்லாமற் செய்ய இந்தியாவும் அமெரிக்காவும் பெருமுயற்ச்சி செய்து கொண்டிருக்கின்றன.

மண்ணின் மைந்தர்களா? வந்தேறு குடிகளா?
9-ம் நூற்றாண்டில் வர்த்தகத்துக்காக இந்திய உபகண்டத்திற்கு வந்து குடியேறியவர்களின் வழித்தோன்றல்கள் தான் ரொஹிங்கியர்கள் எனக் கூறப்படுகின்றது. அவர்களை அரக்கனிய இந்தியர்கள் (Arakanese Indians) என்றும் அழைக்கும் வழக்கம் உள்ளது. பெரும்பாலான மியன்மார் வாசிகள் ரொஹிங்கியர்களை பிரித்தானிய ஆட்சியின் போது பங்களாதேசத்தில் இருந்து வந்து குடியேறியவர்களாகவே பார்க்கின்றனர். அவர்களை பெரும்பான்மை பௌத்தர்கள் ரொஹிங்கியர்கள் எனச் சொல்லக் கூடாது பெங்கோலியர்கள் எனவே அழைக்க வேண்டும் என்கின்றனர். அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என பௌத்தர்களில் பெரும்பாலோர் கருதுகின்றார்கள். உலகில் அதிக மக்கள் தொகைச் செறிவைக் கொண்ட பங்களாதேசம் ரொஹிங்கியர்களை உள் அனுமதிக்கத் விரும்பவில்லை. மியன்மார் பிரச்சனை தொடர்பாக இந்தியா மியன்மார் மீது நிர்ப்பந்தம் பிரயோகிக்க வேண்டும் என பங்களாதேசம் இந்தியாவை வலியுறுத்தி வேண்டியது. பங்களாதேசத்தின் வேண்டுகோளைப் புறக்கணித்தால் அது சீனாவிடம் செல்லலாம் என்ற அச்சத்தால் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தனது சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக மியன்மார் சென்றார்.

நாடற்றவர்களாக்கப் பட்ட ரொஹிங்கியர்கள்
மியன்மாரில் குடியுரிமையுடன் வாழ்ந்து வந்த ரொஹிங்கியர்களில் பெரும்பான்மையானவர்கள் 1982-ம் ஆண்டு அங்கு நிறைவேற்றப்பட்ட பர்மியக் குடியுரிமைச்சட்டத்தின் படி நாடற்றவர்களாக்கப்பட்டனர். இதனால் அவர்கள் உலகத்திலேயே மிகப்பெரிய நாடற்ற இனமாக்கப்பட்டனர். குடியுரிமையற்று இருப்பதால் மியன்மாரில் சட்டபூர்வமான தொல்லைகள் பலவற்றுக்கு அவர்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள். ரக்கைன் மாகாணத்தில் ரக்கைன் இனக்குழுமத்தினரே பெரும்பான்மையானவர்கள் அங்கு ரொஹிங்கியா இனக் குழுமத்தினர் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். ரக்கைன் இனக் குழுமத்தினரில் பெரும்பான்மையானவர்கள் பௌத்தர்கள். ரொஹிங்கியர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அரசால் அங்கிகரிக்கப்பட்ட 135 இனக்குழுமங்களைக் கொண்ட மியன்மாரில் ரக்கைன்களும் மியன்மார் அரசால் அடக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட ஓர் இனமாகும். மியன்மாரின் மொத்த மக்கள் தொகையில் ரக்கைன் இனக்குழுமத்தினர் 3.5விழுக்காடு மட்டுமே. மூன்று விழுக்காடு சீனர்களும் இரண்டு விழுக்காடு இந்தியர்ளும் வாழ்கின்றனர். அங்கிகரிக்கப்பட்ட 135 இனக் குழுமத்தில் ரொஹிங்கியர்கள் இல்லை. பங்களாதேசம், இந்தோனேசியா, மலேசியா ஆகிய பெரும்பான்மை இஸ்லாமியர்களைக் கொண்ட நாடுகள் மியன்மாருக்கு அயல் நாடுகளாக இருப்பதால் மியன்மாரில் வாழும் பௌத்தர்கள் மத்தியில் இஸ்லாம் தொடர்பான பெரும் அச்சம் புவிசார்-அரசியல் நன்மை தேடுபவர்களால் விதைக்கப்பட்டுள்ளது. மியன்மார் மீதான இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு ரொஹிங்கியர்கள் பாலமாக இருக்கின்றார்கள் என பௌத்தர்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். ரொஹிங்கியர்கள் இடையில் மக்கள் தொகைப் பெருக்கம் பௌத்தர்களிலும் பார்க்க அதிகம் என பௌத்தர்கள் அஞ்ச வைக்க்ப்பட்டுள்ளனர். ரொஹிங்கியர்கள் வாழும் ரக்கைன் மாகாணம் இயற்கை வளங்கள் நிறைந்த பிரதேசமாகும். அதைச் சுரண்டுவதற்கு முயலும் வெளிநாடுகள் அந்தப் பிரதேசத்தை தமதாக்க முயல்கின்றன. ரக்கைன் மாகாணத்தின் வளங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை, மீன் பிடித்தல் கூட பிந்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது.

இந்தியாவின் அச்சம்
இந்திய அரசு இந்தியாவில் வாழும் ரொஹிங்கியர்கள் தொடர்பாக ஒருவகையான அச்சம் கொண்டுள்ளது. மியன்மாரில் ரொஹிஞ்சியர்களின் விடுதலைக்காகப் போராடும் அரக்கன் ரொஹிங்கியர்கள் விடுதலைப் படையும் ரொஹிஞ்சியா ஒருமைப்பாட்டு அமைப்பு ஆகியவற்றிற்கு பாக்கிஸ்த்தானைச் சேர்ந்த லகசர் இ-தொய்பா அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. ரொஹிங்கியா ஒருமைப்பாட்டு அமைப்பிற்கு பாக்கிஸ்த்தானில் ஒரு தளம் இருக்கின்றது எனவும் நம்பப்படுகின்றது. ரொஹிங்கிய அகதி முகாம்களில் இந்தியாவிற்கு எதிரான பாக்கிஸ்த்தானியத் தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் இருந்தமையையும் இந்திய உளவுத் துறை அவதானித்துள்ளது.

பாக்கிஸ்த்தானிய தீவிரவாதிகள்
லக்சர் இ தொய்பா அமைப்பு 2001-ம் ஆண்டு இந்தியப் பாராளமன்றத்திலும் 2008-ம் ஆண்டு மும்பாய் நகரத்திலும் தாக்குதல்களை நடத்தியது. லக்சர் இ-தொய்பா இந்தியாவின் கடும் முயற்ச்சிகளின் பின்னர் பாக்கிஸ்த்தானில் தடை செய்யப்பட்டது. அதன் அரசிய பிரிவான ஜமாத்-உத்-தவா தொடர்ந்து 2015 வரை இயங்கி வந்தது. இந்தியாவுடன் எல்லையாகக் கொண்ட பாக்கிஸ்த்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அதன் தலைமையகம் இருக்கின்றது. கஷ்மீர் முழுவதும் பாக்கிஸ்த்தானுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கொள்கைய அது கொண்டுள்ளது. இதனால் இந்தியப் பாதுகாப்புத் துறையாலும் உளவுத் துறையாலும் வெறுக்கப்படும் அமைப்புடன் ரொஹிங்கியர்கள் தொடர்பை வைத்திருப்பது இந்தியா அவர்கள் தொடர்பான கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வைத்தது. ரொஹிங்கியர்கள் விடுதலைப் படை மியன்மார் அரச படைகள் மீது நடத்தும் தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. அது மட்டுமல்ல இந்தியாவில் உள்ள ரொஹிஞ்சியர்களூடாக பாக்கிஸ்த்தானில் செயற்படும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்கள் இந்தியாவினுள் ஊடுருவலாம் என இந்தியா கரிசனை கொண்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ரொஹிங்கியர்களை வெளியேற்ற முயல்கின்றது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தின் 36வது கூட்டத் தொடரில் ஆரம்ப உரையாற்றும் போது அதன் ஆணையாளர் செயட் அல் ஹுசேய்ன் தனது கரிசனையைக் கூட வெளியிட்டிருந்தார். இந்தியா பன்னாட்டு அகதி உடன்படிக்கையில் கையொப்பமிடாத படியால் ரொஹிஞ்சியர்களை வெளியேற்ற முடியும் என இந்திய உள்துறை அமைச்சர் சொல்லியதையும் ஆணையாளர் தனது உரையில் உள்ளடக்கியிருந்தார்.


ப்ஆங் சூ கீ பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமில்லை
ஆங் சான் சூ கீ அவர்களின் தேசிய மக்களாட்சிக் கட்சி மியன்மாரில் ஆட்சியில் இருந்தாலும் அவர் அதிகாரம் குறைந்தவராகவே இருக்கின்றார். பாராளமன்றத்தின் இரு அவைகளினதும் உறுப்பினர்களின் கணிசமான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் படையினரிடம் இருக்கின்றது. மக்களவையின் 440உறுப்பினர்களில் 110 பேரை படைத்துறையின் நியமிப்பர் எஞ்சிய 330 உறுப்பினர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர். பாதுகாப்புத் துறை, உள்துறை(காவல் துறை உட்பட) எல்லை விவகாரம் ஆகிய அமைச்சுக்களை படைத்துறையினர் தம் வசம் வைத்திருக்கின்றனர். இதனால் அவர் ரொஹிஞ்சியர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க முடியாதவராக சூ கீ இருக்கின்றார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த வன்முறைகளுக்கு எதிராக கருத்துத் தெரிவுக்கும் சுதந்திரத்தை அவர் பயன்படுத்தவில்லை. அவ்வப்போது அவர் வெளிவிடும் கருத்துக்கள் அந்த வன்முறைகளை ஆதரிக்கும் பாணியில் உள்ளன. படையினரின் செயல்களுக்கு நியாயம் கற்பிப்பதாக அவரது நாட்டு மக்களுக்கான உரை அமைந்திருந்தது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அவரது நாட்டு மக்களுக்கன உரை எல்லோரையும் ஏமாற்றியது. பன்னாட்டு விசாரணைக்கு தாம் அஞ்சவில்லை என்றார் அவர்.

சீனாவிற்கு மியன்மார் வேண்டும்
சீனாவின் முத்துமாலைத் திட்டத்தின் முதல் முத்தாக இருப்பது மியன்மார்தான். மியன்மாரை சீனாவின் பிடியில் இருந்து பறிப்பதில் அமெரிக்கா வெற்றி கண்டு வருகையில் அமெரிக்காவின் மியன்மார் முதலீடான ஆங் சான் சூ கீயின் பெறுமதி குறைவடையாமல் இருக்க வேண்டும் என்றால் பெரும்பான்மை பௌத்தர்களின் ஆதரவை சூ கீ அம்மையார் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அதனால் அவர் புத்த தர்மத்தைப் புறந்தள்ளி விட்டு வாக்கு வேட்டை அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார். சீனாவின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் பெரும் சவாலாக உள்ள இடம் மலாக்கா நீரிணையாகும். அது உலகின் கடற்போக்குவரத்தின் பிரச்சனைக்குரிய திருகுப் புள்ளிகளில் ஒன்றாகும். அதில் வைத்து சீனாவிற்குச் செல்லும் கப்பல்களையும் சீனாவிலிருந்து செல்லும் கப்பல்களையும் சீனாவின் எதிரிகளால் தடுக்க முடியும். இதற்கு மாற்றீடாக மியன்மாரூடாக ஒரு தரைவழிப்பாதையை சீனா தனது வர்த்தகப் போக்குவரத்துக்கு என உருவாக்கியுள்ளது. அது வங்களா விரிகுடாவில் ரொஹிங்கியர்கள் வாழும் ரகிங்கியா மாகாணத்தில் இருந்து ஆரம்பமாகின்றது. மியன்மாரில் சீனாவின் ஆதிக்கத்தைத் தவிர்ப்பதற்கு மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் சூ கீ அம்மையார் தேவைப்படுகின்றார். . மியன்மாரின் கனிம வளங்களை அகழ்வு செய்யும் உரிமத்தையும் இராவாடி நதியில் இருந்து மின் உற்பத்தி செய்யும் உரிமையையும் சீனா தனதாக்கிக் கொண்டது. 2007-ம் ஆண்டு மியன்மாரின் கடலில் இயற்கைவாயு ஆய்விற்கான ஒப்பந்தத்தையும் சீனா செய்து கொண்டது. 2009ம் ஆண்டு 2.5பில்லியன் டொலர் பெறுமதியான 2380 கிலோ மீட்டர் நீளமான  எரிபொருள் வழங்கல் குழாயையும் நிர்மானிக்கும் ஒப்பந்தத்தை இரு நாடுகளும் செய்து கொண்டன. இரவாடி நதி மின் உற்பத்தியில் 90 விழுக்காடு சீனாவிற்கே செல்லும் என்பதால் அதற்குப் பலத்த எதிர்ப்பு மியன்மாரில் உருவானது. இதனால் அந்தத் திட்டம் இடை நிறுத்தப்பட்டது. இந்த எதிர்ப்புக்கு யார் தூபமிட்டார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

காற்றில் பறந்த காக்கும் பொறுப்பு.
R2P எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Responsibility to Protect என்ற பதம் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு 2001-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் கனடிய அரசியல்வாதி கரத் இவன்ஸ் International Commission on Intervention and State Sovereignty என்னும் பெயரில் இதை முன்னெடுத்தார். அப்போதைய ஐநா பொதுச் செயலர் கோஃபி அனன் இனவழிப்பைப் பார்த்துக் கொண்டிருக்காமல் முன் கூட்டியே தடை செய்ய எந்த நாட்டின் இறையாண்மையும் தடுக்க முடியாது என்றார். 2008-ம் ஆண்டு மியன்மாரில் நர்கீஸ் புயல் தாக்கியபோது பிரெஞ்சு வெளியுறவுத் துறை அமைச்சர் காக்கும் பொறுப்பு அடிப்படையில் மியன்மார் அரசின் தடையையும் மீறி மற்ற நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்றார். காக்கும் பொறுப்பு இனச் சுத்தீகரிப்பைத் தடுக்க வேண்டும் என்கின்றது. மியன்மாரில் நடப்பது இனச் சுத்தீகரிப்புக்கான பாடப்புத்தக உதாரணம் என்கின்றார் ஐநா மனித உரிமைக்கழக ஆணையாளர் அல் ஹுசேய்ன். ஆனால் மியன்மார் இஸ்லாமியர்களை யாரும் காக்கச் படைகளுடன் செல்லவில்லை.

தீர்க்காத தீர்வு
ரொஹிங்கியர்களுக்கு குடியுரிமை வழங்குவதன் மூலம் அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என சில பன்னாட்டு அமைப்புக்களும் அரசுறவியலாளர்களும் கருத்து வெளியிடுகின்றனர். ஆனால் மியன்மாரின் கமான் இனக்குழுமத்தினர் பிறப்பால் குடியுரிமையுள்ள இஸ்லாமியர்கள். அவர்கள் தமது நிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு இடைந்தங்கல் முகாம்களில் வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் சொந்த நிலங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர். பெரும்பான்மை பௌத்தர்களின் மற்ற மதத்தினருடன் இணைந்து வாழும் மனநிலை அவசியமாகும்.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...